Wednesday 26 July 2017

நேற்று கடையில் டீ சாப்பிட்டுகொண்டிருந்தபோது,ஓய்வு பெற்ற காவல்துறை நண்பரும் டீ சாப்பிட்டு கொண்டிருந்தார்.அவரிடம்..,
"என்ன சார் நல்லாயிருங்கிளா,பார்த்து ரொம்ப நாளாச்சு,டீ க்கு நான் காசு கொடுக்கிறேன் சார்"
"பரவாயில்லை தம்பி நானே கொடுக்கிறேன்.நான் ரிட்டையர்ட் ஆகிட்டேன் தெரியுமா?"
"தெரியும் சார்,இதே நீங்கள் பதவியில் இருந்து நான் டீ வாங்கி கொடுத்தால் அது பதவிக்காக வாங்கி கொடுத்தது போல் இருக்கும் நீங்க ரிட்டையர்ட் ஆகியவுடன் வாங்கி கொடுப்பது தான் உங்களுக்கு வாங்கி கொடுப்பது போல அதுதான் உண்மையான அன்பு"
"பதவி இருந்த வரை எல்லோரும் வணக்கம் வைத்தார்கள் வலிய பேசினார்கள் இப்போது யாரும் கண்டுக்கிறமாட்டேங்கிறார்கள்,என் மனைவியே பழைய மாதிரி மதிக்கிறதில்லை"என்றார்.
நான் அவருக்கு தைரியம் சொல்லி விடைப்பெற்றேன்.அரசு வேலையோ அல்லது பதவியோ அது இருக்கும்போது கண்ணில் பட்டதெல்லாம் சாதாரணமாக தோன்றும்.எல்லோரையும் காக்க வைக்க,அலட்சியமாக பார்க்க சொல்லும்.அவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இவர்கள் அதிகார போதையில் வீட்டில் மனைவியுடன் கூட அன்பாக நடக்க மாட்டார்கள்.
சிட்டா அடங்கல் வாங்க போனால் மந்திரி மாதிரி பிகு பண்ணும் ஒரு வி.ஏ.ஓ வை சமீபத்தில் ஒரு உணவகத்தில் பார்த்தேன்.சிட்டா அடங்கலுக்கு பணம் கொடுத்தால் அலட்சியமாக இடது கையில் வாங்குபவர் தற்போது பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.
நானாக வலிய சென்று நலம் விசாரித்தேன்.யாரும் மதிப்பதில்லை என புலம்பினார்.அவருக்கு சிக்கன் ரைஸ் வாங்கிகொடுத்தவடன் கண்கலங்கி பெற்றுக்கொண்டார்.
பதவியில் இருப்பவர்களின் வாழ்வு ஓய்வு பெற்றவுடன் பரமபத பாம்பு போல் உச்சத்தில் இருந்தவர் திடீரென்று எந்த அதிகாரம் இல்லாமல் ஆகி விடுகிறார்கள்.அதிகாரியின் கடைக்கண் பட்டால் போதும் என நினைக்கும் பியூன் அவர் ஓய்வு பெற்றவுடன் அவரை கடைக்கண்ணால் கூட பார்ப்பதில்லை.
பதவியில் இருக்கும்போதே எல்லோரிடமும் அன்பாகவும்,அரவணைப்பாகவும் இருக்கவேண்டும் தனக்கு கிடைக்கும் மரியாதை தன் பதவிக்காகதான் என உணரவேண்டும்.ஓய்வுக்கு பின் என்ன என்பதை திட்ட மிட்டு வாழ்ந்தால் கடைசி காலம் இனிமையாக கழியும்.
பதவி,அதிகாரம்,பணம்,இளமை,அழகு,புகழ் இவை யாருக்கும் நிரந்தரமில்லை என உணர்ந்தாலே யாரும் நம்மை வீழ்த்தவும் முடியாது நம் வாழ்வும் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.