Monday 23 December 2019

மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8

மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8
மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8
செபித்திட காலம் செப்புவேன் மக்களே
குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்
அவித்திடும் இரவி அனலும் மேலும்
தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே
                              -மச்சமுனி (யோகம் ஞானம் வைத்தியம்)
பொருள்:
ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.
நாம் திருப்பரங்குன்றத்தை அடையும் போது பின்மதியம் மூன்று மணி. மார்கழி மாதத்தின் இளஞ்சூடான வெய்யில் குளிருக்கு இதமாக இருந்தது. திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சரவணப் பொய்கைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினோம். அடிவாரத்தின் வலப்பக்கம் உள்ள குளத்தில் துணிகளை வெளுத்துக்கொண்டிருந்தனர். படிக்கட்டுகளில் ஏறியபடி கீழ்நோக்கிப் பார்க்கும்போது வயல்வெளியின் பச்சைப் போர்வையும் பனைமரங்களும் ஓர் அழகிய நீர்வண்ண ஓவியம் போல் காட்சியளித்தது. குடும்பம் குடும்பமாக குரங்குகள் எங்களைக் கடந்தும், எதிர்கொண்டும் படிகளில் பயணித்துக் கொண்டிருந்தன... சித்தர் மச்சமுனியை தரிசிக்க நாங்கள் தொடர்ந்து படியேறிக்கொண்டிருந்தோம்...

மதுரைக்குத் தென்மேற்கே ஒன்பது கி. மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் கோயில் பல்வேறு புராண - வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. 
'பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு
இல்லை உறுநோயே'
என திருஞானசம்பந்தர் பாடிய சிறப்புமிகு சிவத்தலம் திருப்பரங்குன்றம். ஞான சம்பந்தரோடு சுந்தரரும், வள்ளலாரும், அருணகிரிநாதரும், கச்சியப்ப சிவாச்சாரியாரும் இந்த ஆலயத்தைப் பாடி சிறப்புச் செய்திருக்கின்றனர். வானிலிருந்து பார்க்கும் கோணத்தில் இந்த மலை லிங்க வடிவில் தெரியும் என்பதால், பரம்பொருளே இங்கு வந்து மலையாக வடிவுகொண்டார் எனும் பொருளில் இது திருப்பரங்குன்றம் ஆனது. இறைவனின் திருப்பெயர் பரங்கிரிநாதர். புலவர் நக்கீரர் முருகனைப் போற்றிப் படைத்த 'திருமுருகாற்றுப் படை'யில்தான் 'ஆறு படை வீடு' என்னும் முருகன் வழிபாடு தொடங்குகிறது. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு இந்தத் திருப்பரங்குன்றமே! தேவயானை என்னும் தெய்வானையை முருகன் மணந்த இடமும் இதுவே! மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான்!
(மச்சமுனியின் பெருமைகளைக் கூறும் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் ..)

மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்சமுனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். இவர் மகிமை பொருந்திய தலங்களாக நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இடங்களும் குறிக்கப்படுகின்றன. மேலும், நேபாளத்தின் காட்மண்டுவில் 'பாக்மதி' என்ற இடத்தில் அமைந்துள்ள மச்சேந்திரநாதர் கோயிலில் இவர் ஜீவ சமாதி கொண்டுள்ளார் என்ற கருத்தும் உண்டு.
மச்சேந்திரநாதர் என்ற பெயரில் உள்ள 'நாதர்' என்ற பெயரைக் கொண்டு, இவர் நவநாதச் சித்தர்கள் எனும் நாதச் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது. இவர் அகத்தியர் காலத்தவர் எனவும், அவரிடம் உபதேசம் பெற்றவர் எனவும், வாத நிகண்டு, மச்சமுனி வைப்பு ஆகிய நூல்களை இயற்றியவர் எனவும் 'புலவர் சரித்திர தீபகம்' தெரிவிக்கிறது. 'அபிதான சிந்தாமணி'யோ இவரை போகரின் மாணவர் எனக் குறிக்கின்றது.

'மச்சம்' என்றால் மீன். மீனின் பெயரைக் கொண்ட இந்தச் சித்தரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை உண்டு. கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் ஒரு சமயம், சிவபெருமான் உமையவளுக்கு காலஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஏற்படும் களைப்பின் காரணமாக உமாதேவி தூங்கி விடுகிறார். அங்கு நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனின் வயிற்றில் உள்ள மனிதக் கரு ஒன்று, அந்த உபதேசத்தைக் கேட்டபின் சட்டென மனித உருவத்துடன் வெளிவருகிறது. சிவபெருமான் அக்குழந்தைக்கு 'மச்சேந்திரன்'  எனப் பெயர் சூட்டுகிறார். "நான் உபதேசித்த கால ஞான தத்துவத்தை கருவிலேயே கேட்ட நீ, கருவிலேயே திருவுற்றவன். பல ஞானங்களை விரைவாகக் கற்றுணர்ந்து, மக்களுக்குப் பயன் தரும் செயல்களை ஆற்றி பல்லாண்டு காலம் நாத சித்தனாக இந்த பூமியிலே வலம் வருவாய்! என் குமரன் கோயில் கொண்டுள்ள குன்றம் ஒன்றில் சித்தி ஆவாய்!" என வாழ்த்தி அனுப்புகிறார். (சித்தர் மச்சமுனி தன் சீடன் கோரக்கரை குப்பை மேட்டிலிருந்து உயிர்ப்பித்த கதையை இத்தொடரின் 5-ஆம் அத்தியாயத்தில் வாசிக்கலாம்.)

ஒரு மணி நேரப் படிக்கட்டு நடைப்பயணத்துக்குப் பின் மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தோம். ஒரு பாறையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கிறது விஸ்வநாதர் கோயில்.
வாசலிலேயே வழிமறித்து வலுக்கட்டாயமாக ''சுனை மீன்களுக்குப் பொரி போடுங்கள்" எனக் கூறி நாற்பது ரூபாயை அபகரித்துக்கொண்டனர் கோயில் வியாபாரிகள். ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய செயற்கையான வியாபாரங்கள் பரிகாரங்கள் என்ற பெயரில் அதிகரித்து வருகின்றன. தீபமேற்ற கலப்படமில்லாத நல்லெண்ணையோ, நெய்யோ எந்த ஆலயத்திலும் கிடைப்பதில்லை.
காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குள் சென்று கண்மூடி வழிபடும்போதே பொரிப் பாக்கெட்டை சட்டென பிடுங்கிச் சென்றது குரங்கு. சரி குரங்குக்கு உணவாக ஆனதே அந்தப் பொரி என்ற எண்ணத்துடன் கோயிலுக்குப் பின்பக்கம் உள்ள சுனையை அடைந்தோம். சிறிய மலைப்பாறைக்கிடையே அமைந்திருந்த, அந்தச் சிறு நீர் நிலையில் சிறுசிறு மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. மீன்களே அங்கு சித்தர் மச்சேந்திரராக நீந்துவதாக ஒரு நம்பிக்கை.
சித்தரின் ஜீவசமாதி இருக்கும் இடம் அந்தச் சுனையோ அல்லது விஸ்வநாதர் சந்நிதியோ என நம்மால் அறியமுடியவில்லை. எனினும் ஜீவசமாதி பீடங்கள் அமைந்துள்ள இடங்களில் தவழும் இறை அதிர்வுகளை அங்கு நம்மால் உணர முடிந்தது. கோயிலை விட்டு கீழிறங்கத் தொடங்கும் போது, கோயிலுக்கு வந்தவர்களிடம் எந்த பயமும் இன்றி உணவுப்பொருள்களை அருகில் வந்து வாங்கி உண்ணும் குரங்குக் குட்டிகளைக் காண பரிதாபமாக இருந்தது. காட்டில் அவற்றுக்கு உணவு கிடைக்கவில்லையா? பக்தர்கள் தரும் உணவை உண்டு பழகிவிட்டனவா? காசிவிஸ்வநாதரும் மச்சேந்திரரும் மட்டுமே அறிவர்.

மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை


மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில்
சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை

      சென்னையை அடுத்த மாங்காடு கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு பௌர்ணமி குருபூஜை 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
       
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்கை சீற்றங்களிலி
 ருந்து மக்களைக் காக்கவும், உலக அமைதிக்காகவும், தவமிருந்து ஜீவசமாதியாகி, மக்களைக் காத்து, கேட்கும் வரம் அளித்து வரும் ஐயா சர்ப சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும், சிவபாராயணமும் நடைபெற்றன. மேலும் சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகியும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவருமான சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் போரூர் தர்மலிங்கம், மாநில தலைவர் வேதா, உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 இந்நிகழ்ச்சியில் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் கே.கோபி, மாநில தலைமை செயலாளர் எஸ்.ஏ. நடராஜ், திருப்பணிக்குழு இமய பல்லவர் பிலால், மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் வி.ஆர். நடராஜன், மாநில செயலாளர் லோகநாதன், கா.மா. தலைமை செயலாளர் பி. பிரகலநாதன், இணை செயலாளர் பாலாஜி, மகளிர் அணி தலைவி மகேஸ்வரி மாதா, பொருளாளர் ஜெயந்தி, பொது செயலாளர் சகிலா, பிரபாவதி, மக்கள் செய்தி ஆசிரியர் சுசிலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.