Monday, 3 February 2014

கை நடுக்கத்திற்கு வெள்ளைத்தாமரை!

சில நோய்களுக்கான வைத்தியத்தை நம்முடைய வீட்டில் எளிய முறையில் செய்து கொள்வதற்காக அறிந்து கொள்ள வேண்டிய சில மருத்துவக் குறிப்புகள்:

செருப்புக் கடி:

பச்சை மூங்கில் குச்சியை துண்டாக வெட்டி எடுத்து நீர் விட்டு மைய அரைத்து செருப்புக்கடியின் மீது தடவிவர குணமாகும்.

தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் இட்டு கருக்கி எடுத்து அதனை தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணை குழப்பி செருப்புக் கடிபட்ட இடத்தில் தடவிட குணமாகும்.

தேள் கடி:

தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்­ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

ஆண்மைக் குறைவு:

மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

தாது விருந்தி:

முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

உடல் மெலிய:

100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.

இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.

கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீ­ர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.

நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

கை நடுக்கம்:

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.

வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
ஆரஞ்சு....

இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக்குழாய்களின் அடைப்பை நீக்கி ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.

பக்கவாதம் வராமல் தவிர்க்க:

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்.
அவ்வப்போது ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் (மருத்துவர்கள் பரிந்துரைத்த) மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. மது குடிக்காதீர்கள் - புகை பிடிக்காதீர்கள்.
புகைபிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையானது ரத்தக் குழாய் சுவற்றைத் தாக்குகிறது. ரத்தம் உறைதலை விரைவாக்குகிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் இதயம் அதிகமாகச் செயல்படும்படி தூண்டுகிறது. மது அருந்துவதும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

3. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.
சர்க்கரை நோயானது உடலின் எல்லா பகுதியிலும் உள்ள சின்ன ரத்தக் குழாய் முதல் பெரிய ரத்தக் குழாய் வரையிலும் பாதிக்கும். இது அடைப்பு மற்றும் ரத்தக் கசிவை ஏற்படுத்திவிடலாம்.

4. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்
உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள். சமச்சீரான உணவுக்குப் பழங்கள், சிறுதானிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரியுங்கள்.

5. தொடர் மருத்துவப் பரிசோதனை
பக்கவாதம் வருவதற்கான அபாயத்துக்கு உட்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள்.

திராட்சை அவசியம் சாப்பிடுங்க..!

திராட்சைப் பழத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. திராட்சையை அப்படியே சாப்பிட யோசிப்பவர்கள் அதை ஜூஸாக சாப்பிடலாம். எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்’டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம்.

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்பது இயற்கை மருத்துவர்களின் அட்வைஸ்!
சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?

ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா? என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார்.

நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு செல்கிறது. உணவு உட்கொண்டதும் இரைப்பையின் செயல்பாடு அதிகரித்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒருவித மந்த நிலை ஏற்படுகிறது.

சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?

'கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.'

சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா?

'சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.'

சாப்பிடும்போது குளிர்ந்த நீர் அருந்தலாமா?

'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.'

சாப்பிட்டதும் குளிக்கலாமா?

'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.'

சாப்பாட்டின்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா?

'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்'

சாப்பிட்டதும் தூங்கலாமா?

'மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க செல்லவேண்டும்.'

சாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்யலாமா?

'சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.'
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று. இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.