Tuesday, 3 March 2020

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?
பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.
அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள்: தெய்வங்கள்: தேவதைகள்:
அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குலதெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குலதெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குலதெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள்பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழுமுதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும் வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும் அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும் அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை அன்பு காதல் பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு பாசம் காதல் நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம் பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
ராமர் சீதை லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.
16 பேறுகளும் கிட்டும். நடனம் இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும் ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி செல்வம் வீரம் மூன்றும் கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும் எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள்பாலிக்கும் லட்சுமி படமும் லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள்பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும்.
மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது. துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி பட்டினி பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
சித்தர்கள் மகான்கள் முனிவர்கள் யோகிகள் ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.

Monday, 23 December 2019

மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8

மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8
மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8
செபித்திட காலம் செப்புவேன் மக்களே
குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்
அவித்திடும் இரவி அனலும் மேலும்
தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே
                              -மச்சமுனி (யோகம் ஞானம் வைத்தியம்)
பொருள்:
ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.
நாம் திருப்பரங்குன்றத்தை அடையும் போது பின்மதியம் மூன்று மணி. மார்கழி மாதத்தின் இளஞ்சூடான வெய்யில் குளிருக்கு இதமாக இருந்தது. திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சரவணப் பொய்கைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினோம். அடிவாரத்தின் வலப்பக்கம் உள்ள குளத்தில் துணிகளை வெளுத்துக்கொண்டிருந்தனர். படிக்கட்டுகளில் ஏறியபடி கீழ்நோக்கிப் பார்க்கும்போது வயல்வெளியின் பச்சைப் போர்வையும் பனைமரங்களும் ஓர் அழகிய நீர்வண்ண ஓவியம் போல் காட்சியளித்தது. குடும்பம் குடும்பமாக குரங்குகள் எங்களைக் கடந்தும், எதிர்கொண்டும் படிகளில் பயணித்துக் கொண்டிருந்தன... சித்தர் மச்சமுனியை தரிசிக்க நாங்கள் தொடர்ந்து படியேறிக்கொண்டிருந்தோம்...

மதுரைக்குத் தென்மேற்கே ஒன்பது கி. மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் கோயில் பல்வேறு புராண - வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. 
'பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு
இல்லை உறுநோயே'
என திருஞானசம்பந்தர் பாடிய சிறப்புமிகு சிவத்தலம் திருப்பரங்குன்றம். ஞான சம்பந்தரோடு சுந்தரரும், வள்ளலாரும், அருணகிரிநாதரும், கச்சியப்ப சிவாச்சாரியாரும் இந்த ஆலயத்தைப் பாடி சிறப்புச் செய்திருக்கின்றனர். வானிலிருந்து பார்க்கும் கோணத்தில் இந்த மலை லிங்க வடிவில் தெரியும் என்பதால், பரம்பொருளே இங்கு வந்து மலையாக வடிவுகொண்டார் எனும் பொருளில் இது திருப்பரங்குன்றம் ஆனது. இறைவனின் திருப்பெயர் பரங்கிரிநாதர். புலவர் நக்கீரர் முருகனைப் போற்றிப் படைத்த 'திருமுருகாற்றுப் படை'யில்தான் 'ஆறு படை வீடு' என்னும் முருகன் வழிபாடு தொடங்குகிறது. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு இந்தத் திருப்பரங்குன்றமே! தேவயானை என்னும் தெய்வானையை முருகன் மணந்த இடமும் இதுவே! மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான்!
(மச்சமுனியின் பெருமைகளைக் கூறும் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் ..)

மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்சமுனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். இவர் மகிமை பொருந்திய தலங்களாக நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இடங்களும் குறிக்கப்படுகின்றன. மேலும், நேபாளத்தின் காட்மண்டுவில் 'பாக்மதி' என்ற இடத்தில் அமைந்துள்ள மச்சேந்திரநாதர் கோயிலில் இவர் ஜீவ சமாதி கொண்டுள்ளார் என்ற கருத்தும் உண்டு.
மச்சேந்திரநாதர் என்ற பெயரில் உள்ள 'நாதர்' என்ற பெயரைக் கொண்டு, இவர் நவநாதச் சித்தர்கள் எனும் நாதச் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது. இவர் அகத்தியர் காலத்தவர் எனவும், அவரிடம் உபதேசம் பெற்றவர் எனவும், வாத நிகண்டு, மச்சமுனி வைப்பு ஆகிய நூல்களை இயற்றியவர் எனவும் 'புலவர் சரித்திர தீபகம்' தெரிவிக்கிறது. 'அபிதான சிந்தாமணி'யோ இவரை போகரின் மாணவர் எனக் குறிக்கின்றது.

'மச்சம்' என்றால் மீன். மீனின் பெயரைக் கொண்ட இந்தச் சித்தரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை உண்டு. கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் ஒரு சமயம், சிவபெருமான் உமையவளுக்கு காலஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஏற்படும் களைப்பின் காரணமாக உமாதேவி தூங்கி விடுகிறார். அங்கு நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனின் வயிற்றில் உள்ள மனிதக் கரு ஒன்று, அந்த உபதேசத்தைக் கேட்டபின் சட்டென மனித உருவத்துடன் வெளிவருகிறது. சிவபெருமான் அக்குழந்தைக்கு 'மச்சேந்திரன்'  எனப் பெயர் சூட்டுகிறார். "நான் உபதேசித்த கால ஞான தத்துவத்தை கருவிலேயே கேட்ட நீ, கருவிலேயே திருவுற்றவன். பல ஞானங்களை விரைவாகக் கற்றுணர்ந்து, மக்களுக்குப் பயன் தரும் செயல்களை ஆற்றி பல்லாண்டு காலம் நாத சித்தனாக இந்த பூமியிலே வலம் வருவாய்! என் குமரன் கோயில் கொண்டுள்ள குன்றம் ஒன்றில் சித்தி ஆவாய்!" என வாழ்த்தி அனுப்புகிறார். (சித்தர் மச்சமுனி தன் சீடன் கோரக்கரை குப்பை மேட்டிலிருந்து உயிர்ப்பித்த கதையை இத்தொடரின் 5-ஆம் அத்தியாயத்தில் வாசிக்கலாம்.)

ஒரு மணி நேரப் படிக்கட்டு நடைப்பயணத்துக்குப் பின் மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தோம். ஒரு பாறையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கிறது விஸ்வநாதர் கோயில்.
வாசலிலேயே வழிமறித்து வலுக்கட்டாயமாக ''சுனை மீன்களுக்குப் பொரி போடுங்கள்" எனக் கூறி நாற்பது ரூபாயை அபகரித்துக்கொண்டனர் கோயில் வியாபாரிகள். ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய செயற்கையான வியாபாரங்கள் பரிகாரங்கள் என்ற பெயரில் அதிகரித்து வருகின்றன. தீபமேற்ற கலப்படமில்லாத நல்லெண்ணையோ, நெய்யோ எந்த ஆலயத்திலும் கிடைப்பதில்லை.
காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குள் சென்று கண்மூடி வழிபடும்போதே பொரிப் பாக்கெட்டை சட்டென பிடுங்கிச் சென்றது குரங்கு. சரி குரங்குக்கு உணவாக ஆனதே அந்தப் பொரி என்ற எண்ணத்துடன் கோயிலுக்குப் பின்பக்கம் உள்ள சுனையை அடைந்தோம். சிறிய மலைப்பாறைக்கிடையே அமைந்திருந்த, அந்தச் சிறு நீர் நிலையில் சிறுசிறு மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. மீன்களே அங்கு சித்தர் மச்சேந்திரராக நீந்துவதாக ஒரு நம்பிக்கை.
சித்தரின் ஜீவசமாதி இருக்கும் இடம் அந்தச் சுனையோ அல்லது விஸ்வநாதர் சந்நிதியோ என நம்மால் அறியமுடியவில்லை. எனினும் ஜீவசமாதி பீடங்கள் அமைந்துள்ள இடங்களில் தவழும் இறை அதிர்வுகளை அங்கு நம்மால் உணர முடிந்தது. கோயிலை விட்டு கீழிறங்கத் தொடங்கும் போது, கோயிலுக்கு வந்தவர்களிடம் எந்த பயமும் இன்றி உணவுப்பொருள்களை அருகில் வந்து வாங்கி உண்ணும் குரங்குக் குட்டிகளைக் காண பரிதாபமாக இருந்தது. காட்டில் அவற்றுக்கு உணவு கிடைக்கவில்லையா? பக்தர்கள் தரும் உணவை உண்டு பழகிவிட்டனவா? காசிவிஸ்வநாதரும் மச்சேந்திரரும் மட்டுமே அறிவர்.

மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை


மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில்
சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை

      சென்னையை அடுத்த மாங்காடு கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு பௌர்ணமி குருபூஜை 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
       
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்கை சீற்றங்களிலி
 ருந்து மக்களைக் காக்கவும், உலக அமைதிக்காகவும், தவமிருந்து ஜீவசமாதியாகி, மக்களைக் காத்து, கேட்கும் வரம் அளித்து வரும் ஐயா சர்ப சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும், சிவபாராயணமும் நடைபெற்றன. மேலும் சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகியும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவருமான சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் போரூர் தர்மலிங்கம், மாநில தலைவர் வேதா, உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 இந்நிகழ்ச்சியில் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் கே.கோபி, மாநில தலைமை செயலாளர் எஸ்.ஏ. நடராஜ், திருப்பணிக்குழு இமய பல்லவர் பிலால், மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் வி.ஆர். நடராஜன், மாநில செயலாளர் லோகநாதன், கா.மா. தலைமை செயலாளர் பி. பிரகலநாதன், இணை செயலாளர் பாலாஜி, மகளிர் அணி தலைவி மகேஸ்வரி மாதா, பொருளாளர் ஜெயந்தி, பொது செயலாளர் சகிலா, பிரபாவதி, மக்கள் செய்தி ஆசிரியர் சுசிலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

Saturday, 4 May 2019

மௌனத்தில் இருந்து ஞானம் வழங்கிய மகான்கள்
நம் மண்ணில் பலர் உண்டு .

நமது காலத்தில் ,
நம் கண் முன்னே
அப்படி ஒரு குருவாய் வாழ்ந்து வரும் சித்த புருஷர்தான்
சுவாமிமலை மௌன குரு - "திண்ணை  சித்தர் " என அழைக்கப்படும்
ஸ்ரீ. சத்குரு  பிரகாசம் சுவாமிகள் .

 சுமார் 55 வயது மதிப்புள்ள பிரகாசம் சுவாமிகள் , சுவாமிமலையில்தான் அவதரித்துள்ளார்கள்.

பள்ளி பருவத்திலேயே தனை மறந்து தியானத்தில் ஆழ்ந்துவிடும்  சுவாமிகள் , அவரது குரு அருளால் ஆட்கொள்ளப்பட்டு  தற்போது சுவாமிமலை வீதிகளில் வலம் வருகிறார்கள்.

 சித்த புருஷர் என்றால்...
அவர் ஏதேனும் உபதேசம் செய்கிறாரா ?
சித்து விளையாட்டுக்கள் செய்கிறாரா  ?
மந்திர தீட்சை  செய்கிறாரா ?

இப்படி பல கேள்விகள் நம்முள் எழுவது உண்டு.
இவை அனைத்திற்கும்
"இல்லை"
என்பதே பதில்.

அவர் ஏதும் உபதேசிப்பது  இல்லை.
அவரது மௌனமே உபதேசம் ! 
அவர் ஏதும் சித்துக்கள் செய்வது இல்லை.
அவரது மௌனமே மிகப் பெரிய சித்து !
 அவர் ஏதும் மந்திர தீட்சை அளிப்பது இல்லை.
 அவரது மௌனமே மேலான தீட்சை !


யாருடனும் பேசுவதில்லை.
தன் தேவைகளுக்காகவும் பேசுவதில்லை.
உண்மையில் தேவை என்பது அவருக்கு ஏது ?

குளிப்பது இல்லை
ஆயின் ஒருபோதும் அவரிடம்
 நாற்றம் இல்லை

வெள்ளை வேஷ்டி
வெள்ளை துண்டு
ஜடை முடி
செருப்பில்லா கால்கள்
சதா லயத்தில் ஆழ்ந்த கண்கள்  
கண்களில் ஞான கனல்
இந்த எளிய தோற்றம்தான் 

திண்ணை சித்தர் சுவாமிகள்  

நாடிவருவோர் தரும் பண்டங்களை
ஓரிரு துண்டுகள்  உண்பது உண்டு
எப்போதாவது
அதுவும் அடியவரின் வினை தீர்க்கவே !

ரத வீதிகளில் எப்போதும் ஓயாத நடை.
சிலபோது
 காலியாய் உள்ள   திண்ணைகளில்  ஓய்வு.

" அவரைப்   நான் பார்த்தேன் ,
  அவர் என்னைப் பார்த்தார்,
 எனக்கு இன்ன பலன் ஏற்ப்பட்டது "
 என கூறியபடி நாள்தோறும்
 பெருகும் மக்கள் கூட்டம்

தொலைக் காட்சிகளும்
 பத்திரிக்கைகளும் தொடர்ந்து
 அவரை வெளிபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

மக்கள் பக்தி உணர்வோடு அவரை நாடினாலும்
அவரது உயர் உணர்விற்கு
ஊரு விளைவிக்காத வண்ணம்
அவரைத்  தொடாமலும் ,
அவரோடு பேசியேத் தீர வேண்டும்
என்று அவரைச்   சுற்றி சுற்றி வராமலும் இருந்தால்
மிகவும் நன்று.

சுவாமிகளின் மகிமைகள் தொடரும் ...

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க
கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...
மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...
தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!
என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.
ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.
அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...
"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.

Wednesday, 26 July 2017

நேற்று கடையில் டீ சாப்பிட்டுகொண்டிருந்தபோது,ஓய்வு பெற்ற காவல்துறை நண்பரும் டீ சாப்பிட்டு கொண்டிருந்தார்.அவரிடம்..,
"என்ன சார் நல்லாயிருங்கிளா,பார்த்து ரொம்ப நாளாச்சு,டீ க்கு நான் காசு கொடுக்கிறேன் சார்"
"பரவாயில்லை தம்பி நானே கொடுக்கிறேன்.நான் ரிட்டையர்ட் ஆகிட்டேன் தெரியுமா?"
"தெரியும் சார்,இதே நீங்கள் பதவியில் இருந்து நான் டீ வாங்கி கொடுத்தால் அது பதவிக்காக வாங்கி கொடுத்தது போல் இருக்கும் நீங்க ரிட்டையர்ட் ஆகியவுடன் வாங்கி கொடுப்பது தான் உங்களுக்கு வாங்கி கொடுப்பது போல அதுதான் உண்மையான அன்பு"
"பதவி இருந்த வரை எல்லோரும் வணக்கம் வைத்தார்கள் வலிய பேசினார்கள் இப்போது யாரும் கண்டுக்கிறமாட்டேங்கிறார்கள்,என் மனைவியே பழைய மாதிரி மதிக்கிறதில்லை"என்றார்.
நான் அவருக்கு தைரியம் சொல்லி விடைப்பெற்றேன்.அரசு வேலையோ அல்லது பதவியோ அது இருக்கும்போது கண்ணில் பட்டதெல்லாம் சாதாரணமாக தோன்றும்.எல்லோரையும் காக்க வைக்க,அலட்சியமாக பார்க்க சொல்லும்.அவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இவர்கள் அதிகார போதையில் வீட்டில் மனைவியுடன் கூட அன்பாக நடக்க மாட்டார்கள்.
சிட்டா அடங்கல் வாங்க போனால் மந்திரி மாதிரி பிகு பண்ணும் ஒரு வி.ஏ.ஓ வை சமீபத்தில் ஒரு உணவகத்தில் பார்த்தேன்.சிட்டா அடங்கலுக்கு பணம் கொடுத்தால் அலட்சியமாக இடது கையில் வாங்குபவர் தற்போது பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.
நானாக வலிய சென்று நலம் விசாரித்தேன்.யாரும் மதிப்பதில்லை என புலம்பினார்.அவருக்கு சிக்கன் ரைஸ் வாங்கிகொடுத்தவடன் கண்கலங்கி பெற்றுக்கொண்டார்.
பதவியில் இருப்பவர்களின் வாழ்வு ஓய்வு பெற்றவுடன் பரமபத பாம்பு போல் உச்சத்தில் இருந்தவர் திடீரென்று எந்த அதிகாரம் இல்லாமல் ஆகி விடுகிறார்கள்.அதிகாரியின் கடைக்கண் பட்டால் போதும் என நினைக்கும் பியூன் அவர் ஓய்வு பெற்றவுடன் அவரை கடைக்கண்ணால் கூட பார்ப்பதில்லை.
பதவியில் இருக்கும்போதே எல்லோரிடமும் அன்பாகவும்,அரவணைப்பாகவும் இருக்கவேண்டும் தனக்கு கிடைக்கும் மரியாதை தன் பதவிக்காகதான் என உணரவேண்டும்.ஓய்வுக்கு பின் என்ன என்பதை திட்ட மிட்டு வாழ்ந்தால் கடைசி காலம் இனிமையாக கழியும்.
பதவி,அதிகாரம்,பணம்,இளமை,அழகு,புகழ் இவை யாருக்கும் நிரந்தரமில்லை என உணர்ந்தாலே யாரும் நம்மை வீழ்த்தவும் முடியாது நம் வாழ்வும் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.