Tuesday, 3 March 2020

அம்பிகையில் உருவான சப்த கன்னியர்கள்....
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சப்தகன்னியர்கள் பிறந்த கதை
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.
அவர்கள்..
1 ப்ராம்மி,
2 மகேஸ்வரி,
3 கவுமாரி,
4;வைஷ்ணவி,
5 வராஹி,
6 இந்திராணி,
7 சாமுண்டி,
முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
நம் உடலோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள்
சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.
மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும்.
(அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
படைப்பு ரகசியம்
சப்த கன்னிகைகளின் சூட்சும படைப்பு ரகசியம் என்னவெனில்,பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக உருவெடுத்தவர்கள். கன்னிகையாக இருப்பதற்குக் காரணம் மேலோட்டமாக மட்டுமே விளக்க முடியும். சப்த கன்னிகையின் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும் இந்த சப்த கன்னிகைகளின் காயத்ரி மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்துவந்தால் உணரலாம்.
மனதால் நினைத்தாலே அபயம் கிட்டும்
கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கி அளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை. கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையான என்றும் ஒரு அர்த்தம் உண்டு.
கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக் கூடாது. (அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.
சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!
சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும். நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர்...
அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.
தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர்.
அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள் .
உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தூய ஆடை அணிந்து தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும்.
நெய் விளக்கேற்றி தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு.
ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கோயிலிலோ வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம்.
செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று.
அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்
எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.
புத்தி ஹீன தனு ஜானி கே ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேச விகார்
எனது அறிவோ குறுகியது வாயு மைந்தனான ஆஞ்சநேயா உன்னைத் தியானிக்கிறேன் எனக்கு வலிமை அறிவு உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.
1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர
ஆஞ்சநேயா நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன் வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
நீ ஸ்ரீராம தூதன் எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம் அஞ்ஜனையின் மைந்தன் வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.
3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.
4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா
பொன்னிறம் பொருந்தியவன் நீ சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.
5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.
6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன
நீ சிவபெருமானின் அவதாரம் கேசரியின் மகன் உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.
7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர
நீ அறிவாளி நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன் மிகவும் கூரிய புத்தியை உடையவன் ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.
9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா
நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய் மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.
10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.
11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே
சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!
12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ
ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.
13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.
14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா
ஸனகர் முதலான முனிவர்கள் பிரம்மா போன்ற தேவர்கள் சிவபெருமான் நாரதர் கலைமகள் ஆதிசேஷன்.
15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே
எமன் குபேரன் திரைக் காவலர்கள் கவிஞர்கள் புலவர்கள் எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.
16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா
ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.
17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா
உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.
18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ
பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.
19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.
21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே
ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.
22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா
உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்
23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை
உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை
மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகிறது.
25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா
உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.
26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை
மனம் வாக்கு செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.
27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா
தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.
28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை
மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.
29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா
சத்திய திரேதா துவாபர கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.
30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே
நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.
31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா
எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.
32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா
ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.
33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை
உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.
34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ
அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.
35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ
அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.
36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா
எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.
37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ
ஓ ஆஞ்சநேயா உனக்கு வெற்றி வெற்றி வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே எங்களுக்கு அருள்புரிவீர்களாக.
38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.
39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா
இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.
40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா
என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.
பவன தனய ஸங்கட ஹரன் மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப
துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.
சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா:-
சகல ஐஸ்வர்யங்கள் தரும் கோ பூஜை!
"கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா"
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்!
பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும்.
அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.
மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள். அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள்.
தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள். அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை. உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல்.
ஆகவே, இறைவனாக இருந்தாலும் இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்:-
பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு.
கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும்பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள்.
கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம்.
தோஷத்தை போக்கும் கோமாதா:-
கோயிலுக்கு நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள். கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில் தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை அற்புதமானது. திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால் எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாது. கோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள்.
கோ பூஜை:-
கோ பூஜை வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள் – குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்.
பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ – குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும். யாகம் – ஹோமம் வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
ஆலயத்தில் பசுமடம் இருப்பின் மக்கள் அனைவருமே பசு பராமரிப்பிலும், கோபூஜையிலும் கலந்து கொள்ளலாம். அன்றாடம் செய்ய இயலாதவர்கள்கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும்.
வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.
யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம்.
கோ தானப் பலன்கள்:-
குழந்தை பாக்கியம் பெற கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள்பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.
திருமணம் நடைபெற, நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமைய வில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும்.
ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வும்,கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
வியாதி நீங்க:- ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இந்தக் கோபூஜை யினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம் தீர:-
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.
பசு மடம்:-
கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பலப்பல நன்மைகளைத் தருகிறது. கேட்ட வரத்தை நல்கும் பசுவை எவ்வாறு பராமரித்து போற்ற வேண்டும் என்பது பற்றி சிவதருமோத்தரம் கீழ்கண்டவாறு கூறுகிறது:-
பழங்காலத்தில் பசுக்களைக்கட்டும் தொழுவத்தினை கோயிலாகவே கருதினர். இதனை "ஆக்கோட்டம்'' என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. பசுமடம் என்றும் வழங்குவர். அப்பசுமடத்தினை விதிப்படி செய்விக்க வேண்டும். அதாவது,ஆற்றுமண், ஓடை மண், புற்றுமண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் கொட்டிலின் தரைப்பகுதியை அமைக்க வேண்டும்.
முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று ஆகியவற்றிக்கு வெவ்வேறு இடங்களை அமைக்க வேண்டும். நாள் தோறும் கோசல, கோமலங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வராமல் தூபம் இட வேண்டும். தீபங்கள் ஏற்றவேண்டும். சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தை யோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.
நோயுற்ற பசுக்களுக்கு தனியிடம் அமைத்து, மருந்து அளித்து பேண வேண்டும். அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி,பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். வேனிற் காலத்தில் பசுக்களை சோலைகளிலும், மழைக்காலத்தில் மலைச்சாரல் வனங்களிலும், பனிக் காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் மேய்க்க வேண்டும்.
பால்கறத்தல்....... கன்று பால் உண்டு காம்பை விடுத்த பின், தண்ணீரால் காம்பை கழுவி பாலைக்கறக்க வேண்டும். கபிலை இனப்பசுவின் பாலைச்சிவபூஜைக்கு கொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதனை மனிதர்கள் தங்கள் தேவைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
பசுக்களுக்குத்தீமை செய்தல் கூடாது:-
பசுக்களை ஓட்டிச் செல்லும் போது சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடு பலாசங்கோலினை மெல்ல ஓங்கி போ போ என்று ஓட்டிச் செல்ல வேண்டும். இரக்க மின்றி கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்தில் வீழ்வர். பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும்,பூஜை செய்யாத வர்களும்,காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வார்கள்.
பசுவின் குருதியானது ஒரு துளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம் செய்வர் என்று வேதம் கூறுகிறது. எனவே பசுக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்தல் கூடாது. ஆவுரிஞ்சுக்கல் நாட்டுதலும், சிவனுக்கும், ஆச்சாரியருக்கும் பசுவைத்தானம் செய்தலும் வேண்டும்.
குற்றமற்ற பசுக்களை இடபத்தை சிவசந்நிதிக்கும் தானம் செய் தலும்,சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும் வேண்டும்.இளைத்த பசுவை வாங்கி வளர்த்தலும் பெரும் புண்ணியம் தரும். பசுவைக் கொன்றவனும், கொலைக்காகக் கொடுத்தவனும், அதன் இறைச்சியைத்தின்றவனும் துயரில் அழுந்துவார்கள்.எனவே பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதை நாம் தடுக்க வேண்டும்.
கோயிலுக்குச் செல்பவர்கள் கோயிலின் பசு மடத்திலுள்ள பசுக்களுக்கு அகத்திக் கீரை,பசும்புல், பழங்கள் உள்ளிட்ட தீவனங்களை அளிக்க வேண்டும். நோயுற்ற பசுக்களுக்கு சிகிச்சைக்கான செலவினையும் ஏற்றுக் கொண்டால் நாமும் ஆரோக்கியமான வாழ்வைக் பெறலாம்.
பசுவும் புண்ணியங்களும்:-
*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
*`மா' என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.
*பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
*கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். *பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.*
கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா.
ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக பராமரித்து பாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா.
எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?
பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.
அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள்: தெய்வங்கள்: தேவதைகள்:
அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குலதெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குலதெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குலதெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள்பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழுமுதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும் வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும் அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும் அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை அன்பு காதல் பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு பாசம் காதல் நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம் பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
ராமர் சீதை லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.
16 பேறுகளும் கிட்டும். நடனம் இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும் ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி செல்வம் வீரம் மூன்றும் கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும் எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள்பாலிக்கும் லட்சுமி படமும் லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள்பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும்.
மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது. துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி பட்டினி பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
சித்தர்கள் மகான்கள் முனிவர்கள் யோகிகள் ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.

Monday, 23 December 2019

மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8

மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8
மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8
செபித்திட காலம் செப்புவேன் மக்களே
குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்
அவித்திடும் இரவி அனலும் மேலும்
தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே
                              -மச்சமுனி (யோகம் ஞானம் வைத்தியம்)
பொருள்:
ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.
நாம் திருப்பரங்குன்றத்தை அடையும் போது பின்மதியம் மூன்று மணி. மார்கழி மாதத்தின் இளஞ்சூடான வெய்யில் குளிருக்கு இதமாக இருந்தது. திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சரவணப் பொய்கைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினோம். அடிவாரத்தின் வலப்பக்கம் உள்ள குளத்தில் துணிகளை வெளுத்துக்கொண்டிருந்தனர். படிக்கட்டுகளில் ஏறியபடி கீழ்நோக்கிப் பார்க்கும்போது வயல்வெளியின் பச்சைப் போர்வையும் பனைமரங்களும் ஓர் அழகிய நீர்வண்ண ஓவியம் போல் காட்சியளித்தது. குடும்பம் குடும்பமாக குரங்குகள் எங்களைக் கடந்தும், எதிர்கொண்டும் படிகளில் பயணித்துக் கொண்டிருந்தன... சித்தர் மச்சமுனியை தரிசிக்க நாங்கள் தொடர்ந்து படியேறிக்கொண்டிருந்தோம்...

மதுரைக்குத் தென்மேற்கே ஒன்பது கி. மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் கோயில் பல்வேறு புராண - வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. 
'பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு
இல்லை உறுநோயே'
என திருஞானசம்பந்தர் பாடிய சிறப்புமிகு சிவத்தலம் திருப்பரங்குன்றம். ஞான சம்பந்தரோடு சுந்தரரும், வள்ளலாரும், அருணகிரிநாதரும், கச்சியப்ப சிவாச்சாரியாரும் இந்த ஆலயத்தைப் பாடி சிறப்புச் செய்திருக்கின்றனர். வானிலிருந்து பார்க்கும் கோணத்தில் இந்த மலை லிங்க வடிவில் தெரியும் என்பதால், பரம்பொருளே இங்கு வந்து மலையாக வடிவுகொண்டார் எனும் பொருளில் இது திருப்பரங்குன்றம் ஆனது. இறைவனின் திருப்பெயர் பரங்கிரிநாதர். புலவர் நக்கீரர் முருகனைப் போற்றிப் படைத்த 'திருமுருகாற்றுப் படை'யில்தான் 'ஆறு படை வீடு' என்னும் முருகன் வழிபாடு தொடங்குகிறது. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு இந்தத் திருப்பரங்குன்றமே! தேவயானை என்னும் தெய்வானையை முருகன் மணந்த இடமும் இதுவே! மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான்!
(மச்சமுனியின் பெருமைகளைக் கூறும் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் ..)

மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்சமுனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். இவர் மகிமை பொருந்திய தலங்களாக நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இடங்களும் குறிக்கப்படுகின்றன. மேலும், நேபாளத்தின் காட்மண்டுவில் 'பாக்மதி' என்ற இடத்தில் அமைந்துள்ள மச்சேந்திரநாதர் கோயிலில் இவர் ஜீவ சமாதி கொண்டுள்ளார் என்ற கருத்தும் உண்டு.
மச்சேந்திரநாதர் என்ற பெயரில் உள்ள 'நாதர்' என்ற பெயரைக் கொண்டு, இவர் நவநாதச் சித்தர்கள் எனும் நாதச் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது. இவர் அகத்தியர் காலத்தவர் எனவும், அவரிடம் உபதேசம் பெற்றவர் எனவும், வாத நிகண்டு, மச்சமுனி வைப்பு ஆகிய நூல்களை இயற்றியவர் எனவும் 'புலவர் சரித்திர தீபகம்' தெரிவிக்கிறது. 'அபிதான சிந்தாமணி'யோ இவரை போகரின் மாணவர் எனக் குறிக்கின்றது.

'மச்சம்' என்றால் மீன். மீனின் பெயரைக் கொண்ட இந்தச் சித்தரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை உண்டு. கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் ஒரு சமயம், சிவபெருமான் உமையவளுக்கு காலஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஏற்படும் களைப்பின் காரணமாக உமாதேவி தூங்கி விடுகிறார். அங்கு நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனின் வயிற்றில் உள்ள மனிதக் கரு ஒன்று, அந்த உபதேசத்தைக் கேட்டபின் சட்டென மனித உருவத்துடன் வெளிவருகிறது. சிவபெருமான் அக்குழந்தைக்கு 'மச்சேந்திரன்'  எனப் பெயர் சூட்டுகிறார். "நான் உபதேசித்த கால ஞான தத்துவத்தை கருவிலேயே கேட்ட நீ, கருவிலேயே திருவுற்றவன். பல ஞானங்களை விரைவாகக் கற்றுணர்ந்து, மக்களுக்குப் பயன் தரும் செயல்களை ஆற்றி பல்லாண்டு காலம் நாத சித்தனாக இந்த பூமியிலே வலம் வருவாய்! என் குமரன் கோயில் கொண்டுள்ள குன்றம் ஒன்றில் சித்தி ஆவாய்!" என வாழ்த்தி அனுப்புகிறார். (சித்தர் மச்சமுனி தன் சீடன் கோரக்கரை குப்பை மேட்டிலிருந்து உயிர்ப்பித்த கதையை இத்தொடரின் 5-ஆம் அத்தியாயத்தில் வாசிக்கலாம்.)

ஒரு மணி நேரப் படிக்கட்டு நடைப்பயணத்துக்குப் பின் மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தோம். ஒரு பாறையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கிறது விஸ்வநாதர் கோயில்.
வாசலிலேயே வழிமறித்து வலுக்கட்டாயமாக ''சுனை மீன்களுக்குப் பொரி போடுங்கள்" எனக் கூறி நாற்பது ரூபாயை அபகரித்துக்கொண்டனர் கோயில் வியாபாரிகள். ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய செயற்கையான வியாபாரங்கள் பரிகாரங்கள் என்ற பெயரில் அதிகரித்து வருகின்றன. தீபமேற்ற கலப்படமில்லாத நல்லெண்ணையோ, நெய்யோ எந்த ஆலயத்திலும் கிடைப்பதில்லை.
காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குள் சென்று கண்மூடி வழிபடும்போதே பொரிப் பாக்கெட்டை சட்டென பிடுங்கிச் சென்றது குரங்கு. சரி குரங்குக்கு உணவாக ஆனதே அந்தப் பொரி என்ற எண்ணத்துடன் கோயிலுக்குப் பின்பக்கம் உள்ள சுனையை அடைந்தோம். சிறிய மலைப்பாறைக்கிடையே அமைந்திருந்த, அந்தச் சிறு நீர் நிலையில் சிறுசிறு மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. மீன்களே அங்கு சித்தர் மச்சேந்திரராக நீந்துவதாக ஒரு நம்பிக்கை.
சித்தரின் ஜீவசமாதி இருக்கும் இடம் அந்தச் சுனையோ அல்லது விஸ்வநாதர் சந்நிதியோ என நம்மால் அறியமுடியவில்லை. எனினும் ஜீவசமாதி பீடங்கள் அமைந்துள்ள இடங்களில் தவழும் இறை அதிர்வுகளை அங்கு நம்மால் உணர முடிந்தது. கோயிலை விட்டு கீழிறங்கத் தொடங்கும் போது, கோயிலுக்கு வந்தவர்களிடம் எந்த பயமும் இன்றி உணவுப்பொருள்களை அருகில் வந்து வாங்கி உண்ணும் குரங்குக் குட்டிகளைக் காண பரிதாபமாக இருந்தது. காட்டில் அவற்றுக்கு உணவு கிடைக்கவில்லையா? பக்தர்கள் தரும் உணவை உண்டு பழகிவிட்டனவா? காசிவிஸ்வநாதரும் மச்சேந்திரரும் மட்டுமே அறிவர்.

மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை


மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில்
சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை

      சென்னையை அடுத்த மாங்காடு கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு பௌர்ணமி குருபூஜை 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
       
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்கை சீற்றங்களிலி
 ருந்து மக்களைக் காக்கவும், உலக அமைதிக்காகவும், தவமிருந்து ஜீவசமாதியாகி, மக்களைக் காத்து, கேட்கும் வரம் அளித்து வரும் ஐயா சர்ப சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும், சிவபாராயணமும் நடைபெற்றன. மேலும் சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகியும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவருமான சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் போரூர் தர்மலிங்கம், மாநில தலைவர் வேதா, உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 இந்நிகழ்ச்சியில் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் கே.கோபி, மாநில தலைமை செயலாளர் எஸ்.ஏ. நடராஜ், திருப்பணிக்குழு இமய பல்லவர் பிலால், மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் வி.ஆர். நடராஜன், மாநில செயலாளர் லோகநாதன், கா.மா. தலைமை செயலாளர் பி. பிரகலநாதன், இணை செயலாளர் பாலாஜி, மகளிர் அணி தலைவி மகேஸ்வரி மாதா, பொருளாளர் ஜெயந்தி, பொது செயலாளர் சகிலா, பிரபாவதி, மக்கள் செய்தி ஆசிரியர் சுசிலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.