Saturday, 8 February 2014

ஆரைக் கீரையின் பயன்கள்:-

நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி,நீராரை என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.

இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை சூப்

ஆரைக் கீரை - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 5

பூண்டுப்பல் - 3

மிளகு - 5

சீரகம் - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

இஞ்சி - 1 சிறு துண்டு

உப்பு - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
புளியாரைக் கீரை மருத்துவ பயன்கள்:-

புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும். புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.

மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது. கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத் தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.

புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.

சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் எற்படும் பாதிப்புகள் குறையும்.

அஜிரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய் உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.

புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி அதனுடன் பூண்டு, வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி தவிப்பார்கள். இவர்களுக்கு சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல் இருக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும் உண்டாகும்.

இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் என பல நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.

இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.

தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதனுடன் சிறிது பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.

பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது புளியாரைக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள் பழுத்து எளிதில் உடைந்து புண்கள் குணமாகும்.

புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கி முகம் பளபளக்கும்.

புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி, வெண்ணெய் கலந்து பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை காய்ந்து உதிர்ந்துவிடும்.

புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு பசுவின் மோர் சேர்த்து தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குணமாகும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை அடையலாம்.

இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக சூடாகி வறட்சியடையும். இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் கண் பார்வை நரம்புகள் பலப்படும்.

புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.

நல்ல சுவையுடன் மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை கிடைக்கும் காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.
லெட்டூஸ் கீரையின் பயன்கள்:-

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக்கீரை என்றும் கூறுவர்.சாலட் கீரைகளில் அரசனாய்த் திகழ்வது லெட்டூஸ் என்னும் இலைக்கீரை. இது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் கார்போஹைடிரேட் அடங்கியுள்ளதால் இது காய்கறி போன்றே பயன்படுகிறது.

லெட்டூஸ் கீரையின் தாயகம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

* இந்தக் கீரையானது இமயமலைச்சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும்.

இக்கீரையில் 6 இனங்கள் காணப்படுகின்றன. எகிப்துநாட்டில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளில் இக்கீரையின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களைப் போலவே பண்டைய கிரேக்கர்களும், மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் லெட்டூஸ் கீரையைப் புத்தாண்டு தினத்தன்று தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் இக்கீரை இடம் பெறுவது தனிச் சிறப்பு என்று கருதுகின்றனர்.

அடங்கியுள்ள சத்துக்கள்:

கரப்பான் ஏற்படாமல் தடுக்கும் கீரை இது. சாதாரண உணவு போல் பயன்படுகிறது. இதில் உயர்ந்தரக ஆரோக்கியச் சத்துகள் அடங்கியுள்ளன. காரப்பொருள், முக்கியமான பொருளாகவும், அதே நேரத்தில் அதிகமாகவும் இக்கீரையில் இருக்கிறது.

லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ' 'கே’ போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.

நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

இதயத்தை காக்கும்:

மருத்துவக் குணங்கள் நிரம்பிய இக்கீரை உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் தரமான முறையில் புதுப்பிக்கிறது. இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தமாகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது. உடலும் தொடர்ந்து அரோக்கியத்துடன் இருக்கும்.

இக்கீரையில் அதிக அளவு மக்னீசியம் உள்ளதால் மூளையின் இயக்கம், நரம்புகளின் இயக்கம், தசைகளின் இயக்கம், இதயத்தின் இயக்கம் ஆகியவற்றிற்கு மக்னீசியம் தேவை. எனவே, நன்கு பச்சையாக உள்ள கீரைகளை மிக்ஸி மூலம் அரைத்துப் சூப் போல குடித்தால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பலம் பெறும்.இதே சாறு நுரையீரல்களையும் பலப்படுத்தும். மனத்திற்கு உற்சாகத்தையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் இக்கீரை தருவதால் காலையில் இக்கீரைச்சாற்றை அருந்துவது நல்லது.

சமைத்து சாப்பிடலாம்:

இக்கீரையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பச்சையாகவே சாப்பிடலாம். நன்கு பச்சை நிறத்தில் உள்ள கீரைகள்தாம் சிறந்தவை. தேவைக்கு ஏற்ப இலைகளைப் பறித்து உடனே சமைத்தால் அதிக அளவு வைட்டமின்கள் நமக்குக் கிடைக்கும்.

கீரையை நன்கு கழுவிய பிறகே சமைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் சமைக்க வேண்டும். அதைப் பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பு வகைகள் சேர்த்து பச்சடியாகச் சமைக்கலாம். இந்தக் கீரை கால் வேக்காடு வெந்தாலே போதும். அதற்கு மேல் வேக வைத்தால் தாது உப்புகளும், வைட்டமின்களும் அழிந்துவிடும். எனவே, பத்து நிமிடத்துக்குள்ளேயே கீரையை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வாய்வுத் தொந்தரவு ஆகியன நீங்க இத்துடன் பருப்புச் சேர்த்துச் சமைத்து உண்ணவேண்டும்.

நீரிழிவு குணமாகும்:

இக்கீரையில் செல்லுலோஸ் அதிக அளவில் இருக்கிறது. அதனால் உணவு, குடற்பகுதிக்குள் செல்ல எளிதில் வழி கிடைக்கிறது. குடலும் சுத்தப்படுத்தப்பட்டு மலச்சிக்கல் பூரணமாக நீங்குகிறது. நீண்டகாலமாய் மலச்சிக்கலால் அவதிப்படுவோர் ஒரு வாரத்துக்கு இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அதிக அளவு நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் உடலிலும், மனத்திலும், புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாய்ச் செயல்படுவார்கள். இதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாத உணவு இது.

ஆழ்ந்த தூக்கம்:

இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் லெட்டூஸ் கீரைச் சாற்றை அருந்தினால் போதும். இக்கீரையில் ‘லெக்ட்டு கேரியம்’ என்னும் பொருள் இருக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்கக் கூடியது.

தலைவலி ஏற்பட்டால் ரோஜா எண்ணெயுடன் இக்கீரைச் சாற்றைக் கலந்து நெற்றியில் தடவினால் ஐந்து நிமிடங்களில் குணமாகிவிடும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது:

இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. அதிக அளவில் இரும்புச்சத்து உள்ள லெட்டூஸ் கீரை இரத்தசோகை நோயாளிகளுக்கு மிக உயர்ந்த டானிக் ஆகும். கீரை உடனே செரிமானம் ஆகிவிடுவதால் இரத்த சோகை நோயாளிகளுக்கு இரத்தவிருத்தி ஏற்படுகிறது.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த சோகையையும் லெட்டூஸ் கீரை குணப்படுத்துகிறது. கர்ப்பம் தரிப்பது முதல் தாய்பால் தரும் வரை இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இதனால் அபார்சன் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.
குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி:-

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப் போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும் பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன. இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

1. தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு.

2. வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்.

3. சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன.

4. அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

5. அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

6. நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.

7. இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.

8. யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

9. 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

10. புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.
சுக்கான் கீரை பயன்கள்:- 

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை.

ஆனால் இது தானாக பல இடங்களில் வளர்கிறது. தென்மேற்கு ஆசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் செழித்து வளருகிறது.

இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர்.

இந்தக் கீரையின் விதைகளை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கலாம்.

இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இக்கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

குடற்புண் குணமாக

உணவுமுறை மாறுபாடு, வாயு சீற்றமடைதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம்.

இதய பலவீனம் சரியாக

மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும். இதில் மாறுபாடு ஏற்படுமானால் உடலில் ஏதோ நோய் ஏற்படுகிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது.

இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம்.

பல்வலி குணமாக

சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.

மலச்சிக்கல் நீங்க

மலச்சிக்கலின்றி இருந்தால் நோய்கள் எளிதில் அணுகாது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து.

சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

பசியைத் தூண்ட

சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது.

இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும் .

ஈரல் பலப்பட

மது, புகை, போதை வஸ்துக்கள் பயன் படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது.

இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.

நெஞ்செரிச்லைத் தடுக்க

சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்த

இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.

தேள் கடிக்கு

தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும்.

எனவே தேள் கடித்த உடனே கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. விஷமும் விரைவில் இறங்கும்.

மேலும் சில மருத்துவக் குணங்கள்

· வாந்தியைக் கட்டுப்படுத்தும்.

· வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும்.

· ஆஸ்துமாவின் பாதிப்புகளை குறைக்கும்.

· வாயுவைக் குறைக்கும்.

· நீர்க்கடுப்பைக் குணப்படுத்தும்.

100 கிராம் சுக்கான் கீரையில் உள்ள சத்துக்கள்

சுண்ணாம்புச் சத்து - 60 மி.கி.

இரும்புச் சத்து - 9 மி.கி.

மணிச்சத்து - 15 மி.கி.

வைட்டமின் ஏ - 6000 த

(அனைத்துலக அலகு)

வைட்டமின் சி - 13 மி.கி.

தயாமின் - 0.03 மி.கி.

ரைபோஃபிளேவின் - 0.066

இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரையை நாமும் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.
பல வகை நோய்களுக்கு தீர்வாகும் கரிசலாங்கண்ணி:-

இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

* தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

* மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 அல்லது - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

* காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவுடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 லிருந்து- 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை, கால், பாதம் வீக்கம் குணமாகும்.

* ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி 50 கிராம் போட்டு சாறு சுண்டக் காய்ச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

* குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும். காது வலி இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.

* பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விஷம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில் கட்டவும் விஷம் இறங்கும்.

* குட்டநோய் -: நூறு ஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

* முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

* இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.

* மகோதர வியாதிக்கு: கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச் சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

* ஆஸ்துமா குணமாக: கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

* சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

* தலைப்பொடுகு நீங்க: கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.

* பல் உறுதிக்கு!கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

* நாள்பட்ட புண் ஆற...கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.
பொடுதலை கீரையின் மருத்துவ பயன்கள்:-

கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

இது வெப்பத் தன்மை கொண்டது.

இதனை பூற்சாதம், பொடுதலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல வகையில் அல்லல்படுத்தும்.

இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலை தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

வெள்ளை படுதலை குணப்படுத்த

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொடுகு நீங்க

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால்
பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

விரை வீக்கம் குறைய

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

கருப்பை வலுப்பெற

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

கை கால் வீக்கம் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும்.

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

தோல் நோய்கள் அனைத்திற்கும் பொடுதலை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தலையிலுள்ள பொடுகையும் நீக்கும். இச்செடியின் வேர், காய், பூ அனைத்துமே மருத்துவக் குணம் உடையது, எனவே இச்செடியை வேர், பூ, காயோடு பிடுங்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் விட்டு நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதிக நெருப்பில்லாமல் நன்றாகக் காய்ச்சி வாரம் இருமுறை தலையிர் நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க தலை மற்றும் உடல் தொடர்பான தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.