Tuesday 3 March 2020

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 425 வது அவதார மஹோத்சவம்... மந்திராலயத்தில் கோலாகலம்
கேட்டதும் பக்தர்களுக்கு அருளும் கற்பக விருட்சமாகத் திகழ்பவர் மகான் ஶ்ரீராகவேந்திரர். பிரகலாதனின் மறு அவதாரமாகப் போற்றப்படும் சுவாமி ராகவேந்திரரின் அவதார தினம் இன்று உலகெங்கும் உள்ள ராகவேந்திர சுவாமி ஆலயங்களில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.
ராகவேந்திர சுவாமிகள் தமிழகத்தில் 1595 - ம் ஆண்டு அவதரித்தவர். திருப்பதி ஏழுமலையானின் அருளால் பிறந்தவர் என்பதால் 'வேங்கடநாதர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்பட்டார்.
குரு ராகவேந்திரர்!குரு ராகவேந்திரர்!
இளம் வயதில் தன் தந்தையை இழந்த வேங்கடநாதர் தன் சகோதரி வேங்கடம்மாளின் கணவர் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மாசார்யாவிடம் கல்வி பயின்று வந்தார். சகல கலைகளிலும் தேர்ச்சிபெற்று சத்குணத்தோடு விளங்கிய வேங்கடநாதருக்கு சரஸ்வதி என்னும் குணவதியோடு நிச்சயம் செய்து திருமணம் நடைபெற்றது. வறுமையான வாழ்க்கை என்றபோதும் வேங்கட நாதர்தான் கற்ற நெறிகளிலிருந்து வழுவாது வாழ்ந்துவந்தார்.
குரு காட்டிய வழி
இல்லறத்தில் இருந்தாலும் ராகவேந்தரின் மனம் ஆன்மிக சாதனைகளிலேயே நிறைந்திருந்தது. இதை அறிந்த குரு சுதீந்திரர் வேங்கட நாதரை மத்வ பீடத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். குருவின் வேண்டுதலே இறைவனின் சங்கல்பம் என்பதை உணர்ந்த வேங்கடநாதர் ராகவேந்திரர் என்னும் திருநாமத்தோடு அந்தத் தூயப் பணியை ஏற்றுக்கொண்டு வழிநடத்தினார்.
ஶ்ரீராகவேந்திரர்ஶ்ரீராகவேந்திரர்
அற்புதங்கள் அருளிய மகான்
சுவாமிகள் தன் தவ பலத்தால் பல்வேறு அற்புதங்களைச் செய்தார். இதன் மூலம் அநேகர் அவரை நோக்கி வரத் தொடங்கினர். அன்பு ஒன்றையே தன் கொள்கையாகக் கொண்டு உபதேசம் செய்தார். அவர் அருளால் கல்வியறிவற்றவர் ஞானியாகி நவாபிடம் மந்திரியானார். மகானின் பெருமைகளை அவர் கூற சோதிக்க விரும்பினார் நவாப்.
ஆனால், அதை உணர்ந்த சுவாமிகள், நவாப் தன் தவற்றை உணருமாறு அற்புதம் நிகழ்த்தினார். அதைக் கண்ட நவாப் தன் பிழைக்கு வருந்தி தன்னை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டு சுவாமிகளுக்கு வேண்டியது செய்ய இசைந்தான். முன் ஜன்மத்தில் தான் தவம் செய்த மாஞ்சாலி கிராமத்தில் இருந்து அருள் செய்ய இடம் வேண்டும் என்று கேட்க அதற்கு விருப்பமுடன் நவாப் சம்மதித்தான்.
துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த மாஞ்சாலி கிராமமே இன்று மந்திராலயமாகப் போற்றப்படுகிறது. இங்குதான் மகான் ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 700 ஆண்டுகள் அந்த பிருந்தாவனத்தில் சூட்சுமமாய்த் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்வேன் என்ற சுவாமிகள் இன்றும் தன்னை வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்.
சிறப்பு ஆரத்தி
425 வது குரு வைபவ உற்சவம்
குருவைபவ உற்சவம் பிப்ரவரி 25 ம் தேதி தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வாக சுவாமிகளின் அவதார தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வைபவத்தை யொட்டி திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாலை, வஸ்திரங்கள் ஆகிய ராகவேந்திர சுவாமிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. மடத்தின் பீடாதிபதியான ஶ்ரீ சுபுதேந்திர ஸ்வாமிகள் வைபவத்தை முன்னின்று நடத்தினார். குருமகாவைபவ உற்சவத்தை யொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவந்தன. இன்று சுவாமிகள் பிருந்தாவனத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நாளில் அருகில் இருக்கும் ராகவேந்திரர் ஆலயத்துக்குச் சென்று மகானை வழிபட்டு குருவருளும் திருவருளும் பெறுவோம்.

No comments:

Post a Comment