Tuesday 3 March 2020

சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா:-
சகல ஐஸ்வர்யங்கள் தரும் கோ பூஜை!
"கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா"
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்!
பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும்.
அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.
மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள். அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள்.
தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள். அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை. உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல்.
ஆகவே, இறைவனாக இருந்தாலும் இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்:-
பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு.
கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும்பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள்.
கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம்.
தோஷத்தை போக்கும் கோமாதா:-
கோயிலுக்கு நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள். கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில் தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை அற்புதமானது. திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால் எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாது. கோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள்.
கோ பூஜை:-
கோ பூஜை வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள் – குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்.
பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ – குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும். யாகம் – ஹோமம் வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
ஆலயத்தில் பசுமடம் இருப்பின் மக்கள் அனைவருமே பசு பராமரிப்பிலும், கோபூஜையிலும் கலந்து கொள்ளலாம். அன்றாடம் செய்ய இயலாதவர்கள்கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும்.
வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.
யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம்.
கோ தானப் பலன்கள்:-
குழந்தை பாக்கியம் பெற கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள்பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.
திருமணம் நடைபெற, நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமைய வில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும்.
ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வும்,கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
வியாதி நீங்க:- ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இந்தக் கோபூஜை யினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம் தீர:-
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.
பசு மடம்:-
கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பலப்பல நன்மைகளைத் தருகிறது. கேட்ட வரத்தை நல்கும் பசுவை எவ்வாறு பராமரித்து போற்ற வேண்டும் என்பது பற்றி சிவதருமோத்தரம் கீழ்கண்டவாறு கூறுகிறது:-
பழங்காலத்தில் பசுக்களைக்கட்டும் தொழுவத்தினை கோயிலாகவே கருதினர். இதனை "ஆக்கோட்டம்'' என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. பசுமடம் என்றும் வழங்குவர். அப்பசுமடத்தினை விதிப்படி செய்விக்க வேண்டும். அதாவது,ஆற்றுமண், ஓடை மண், புற்றுமண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் கொட்டிலின் தரைப்பகுதியை அமைக்க வேண்டும்.
முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று ஆகியவற்றிக்கு வெவ்வேறு இடங்களை அமைக்க வேண்டும். நாள் தோறும் கோசல, கோமலங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வராமல் தூபம் இட வேண்டும். தீபங்கள் ஏற்றவேண்டும். சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தை யோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.
நோயுற்ற பசுக்களுக்கு தனியிடம் அமைத்து, மருந்து அளித்து பேண வேண்டும். அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி,பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். வேனிற் காலத்தில் பசுக்களை சோலைகளிலும், மழைக்காலத்தில் மலைச்சாரல் வனங்களிலும், பனிக் காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் மேய்க்க வேண்டும்.
பால்கறத்தல்....... கன்று பால் உண்டு காம்பை விடுத்த பின், தண்ணீரால் காம்பை கழுவி பாலைக்கறக்க வேண்டும். கபிலை இனப்பசுவின் பாலைச்சிவபூஜைக்கு கொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதனை மனிதர்கள் தங்கள் தேவைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
பசுக்களுக்குத்தீமை செய்தல் கூடாது:-
பசுக்களை ஓட்டிச் செல்லும் போது சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடு பலாசங்கோலினை மெல்ல ஓங்கி போ போ என்று ஓட்டிச் செல்ல வேண்டும். இரக்க மின்றி கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்தில் வீழ்வர். பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும்,பூஜை செய்யாத வர்களும்,காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வார்கள்.
பசுவின் குருதியானது ஒரு துளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம் செய்வர் என்று வேதம் கூறுகிறது. எனவே பசுக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்தல் கூடாது. ஆவுரிஞ்சுக்கல் நாட்டுதலும், சிவனுக்கும், ஆச்சாரியருக்கும் பசுவைத்தானம் செய்தலும் வேண்டும்.
குற்றமற்ற பசுக்களை இடபத்தை சிவசந்நிதிக்கும் தானம் செய் தலும்,சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும் வேண்டும்.இளைத்த பசுவை வாங்கி வளர்த்தலும் பெரும் புண்ணியம் தரும். பசுவைக் கொன்றவனும், கொலைக்காகக் கொடுத்தவனும், அதன் இறைச்சியைத்தின்றவனும் துயரில் அழுந்துவார்கள்.எனவே பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதை நாம் தடுக்க வேண்டும்.
கோயிலுக்குச் செல்பவர்கள் கோயிலின் பசு மடத்திலுள்ள பசுக்களுக்கு அகத்திக் கீரை,பசும்புல், பழங்கள் உள்ளிட்ட தீவனங்களை அளிக்க வேண்டும். நோயுற்ற பசுக்களுக்கு சிகிச்சைக்கான செலவினையும் ஏற்றுக் கொண்டால் நாமும் ஆரோக்கியமான வாழ்வைக் பெறலாம்.
பசுவும் புண்ணியங்களும்:-
*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
*`மா' என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.
*பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
*கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். *பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.*
கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா.
ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக பராமரித்து பாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா.

No comments:

Post a Comment