Tuesday 3 November 2020

 சரஸ்வதி தேவியை வணங்கிட ஆயகலைகள் அறுபத்து நான்கும் நமக்கு கிடைக்கும். கலைமகளுக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா, வித்யா தாரணி ஆகியன ஆகும்.

*ஒட்டக்கூத்தர் பூஜித்த கூத்தனூர் சரஸ்வதி*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரஸ்வதிக்கென திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே பூந்தோட்டத்தில் சரஸ்வதி கோவில் உள்ளது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர் வந்துள்ளது. கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
*🌹கூத்தனூர் சரஸ்வதி கோவில் 🌹*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. தமிழ்நாட்டிலேயே சரஸ்வதிதேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர்.
2. சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்டபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என தலவரலாறு கூறுகிறது.
4. பகுகாந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ருகாரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக ஐதீகம்.
5. அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார்.
6.(ஒட்டக்)கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது.
7.விமான கலசம் ஞானத்தின் உருவாய் சரஸ்வதி இங்கு உறைவதைக் குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது.
8.கருவறையில் வீணை இல்லாத
சரஸ்வதியை தரிசிக்கலாம்.
9. அர்த்த மண்டபத்தில் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன.
10.இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல், நேராக உள்ளது சிறப்பு.
11.மகாமண்டபத்தின் இடது புறம் நான்குமுகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன் அருள்புரிகிறார்.
12. கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்ஸம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.
13.கம்பருக்காக இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்தவள்.
14.ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை. தன்னைக் காத்த இந்த சரஸ்வதியை 'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே' என மனதாறப் பாடிப் பணிந்தார் ஒட்டக்கூத்தர்.
15.பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு தன் தாம்பூல எச்சிலைத் தந்து பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள் இந்த தேவி.
16. பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேனபிஷேகம் செய்து அந்த பிரசாத தேனை மோதிரவிரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம்.
17. சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி.
18.விஜயதசமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது வழக்கம்.
19.சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவ மாணவியர் தேர்வு எழுதும் முன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன் வைத்து வணங்கி பின்பே தேர்வு எழுத செல்கின்றனர்.
20.மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகே அரைகிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
*மாணவர்கள் வழிபாடு*
~~~~~~~~~~~~~~~~~~
இக்கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா விஜயதசமி. விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும்.தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர்.
*வாணியம்பாடி சரஸ்வதி*
~~~~~~~~~~~~~~~~~~
பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், வாணியம்பாடியில் உள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள். வேலூர் - கிருஷ்ணகிரி பாதையில் இத் தலம் அமைந்துள்ளது.
*வேதாரண்யம் வீணையில்லாத சரஸ்வதி*
~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேதாரண்யம் வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.
*தெலுங்கானா சரஸ்வதி கோவில்*
~~~~~~~~~~~~~~~~~~~~~
தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் உள்ளது. வர்கல் என்ற கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய பேர் தங்களின் குழந்தைகளின் வித்யாரம்பத்தை அங்கு செய்வார்கள். பாசர் வித்யா சரஸ்வதி கோவில் இது அடிலாபாத் ஜில்லாவில் உள்ளது. நிஜாம்பாத் செல்லும் அனைத்து இரயில்களும் இங்கு நிற்கும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில் வாரங்கால் மாவட்டத்தில் உள்ளது. காளீஸ்வரம் மகா சரஸ்வதி கோவில் சிறப்பு வாய்ந்த கோவில்.
*சிருங்கேரி சாரதாதேவி*
~~~~~~~~~~~~~~~~~~
கர்நாடகா சிருங்கேரி சாரதாதேவி பீடம் உள்ளது. சாரதா தேவி கோவில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய இந்த பீடத்தில் அன்னை சரஸ்வதிக்கு கோவில் உள்ளது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.
*கேரளா சரஸ்வதி கோவில்*
~~~~~~~~~~~~~~~~~~~~
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் தட்சிண மூகாம்பிகா கோவில் உள்ளது. இது பிரபல சரஸ்வதி கோவில். குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. இந்த ஆலயம் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சிங்கவனம் நகருக்கருகில் அமைந்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சரஸ்வதி தேவியின் மதிய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பால், சர்க்கரை மற்றும் பச்சரிசி சேர்த்துச் செய்யப்படும் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
*அரிசியில் எழுதும் குழந்தைகள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தங்களுடைய குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைந்திட விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் பிறந்த நாளின் போதோ அல்லது குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவோ, தங்கள் குழந்தையுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம், பால்பாயசம் போன்றவற்றைப் படைத்து, தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடுகளை செய்கின்றனர். சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். வீட்டிலேயே சரஸ்வதி படத்திற்கு முன்பாகவும் குழந்தைகளை எழுத வைக்கலாம்

No comments:

Post a Comment