Tuesday 3 November 2020

 நான் யார்?

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
பக்திப் பாதையில் முன்னேற்றமடைய விரும்புவோர், “கடவுள் யார்?” “நான் யார்?” “எனக்கும் அவருக்குமுள்ள தொடர்பு என்ன?” போன்றவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். சிலர் இக்கேள்வியினை மிகப்பெரிய புதிராகவும், சிலர் இதனை அசட்டுத் தனமான கேள்வியாகவும் நினைப்பர். “தினந்தோறும் நான் என்னைக் கண்ணாடியில் பார்க்கின்றேன். நான் யார் என்ற கேள்விக்கு என்ன தேவை?” என்றும் நினைப்பர். உண்மையில், “நீ யார்?” என்ற கேள்வியைக் கேட்டால், பலரிடமிருந்து நமக்கு பலவிதமான பதில்கள் வரும். சிலர் தனது பெயரைச் சொல்வர், சிலர் தனது பட்டத்தைச் சொல்வர், சிலர் தனது தொழிலைச் சொல்வர், வேறு சிலர் தனது நாட்டைச் சொல்வர். அதாவது, “என் பெயர் ராம்” என்று பெயரையோ, நான் ஒரு டாக்டர்” என்று தொழிலையோ, “நான் ஒரு பட்டதாரி” என்று படிப்பையோ, “நான் ஓர் இந்தியன்” என்று நாட்டையோ குறிப்பிடுவர். நாம் இந்த பெயரா, படிப்பா, தொழிலா, நாடா–இல்லை, வேறு ஏதாவ தொன்றா என்பதைப் பார்க்க வேண்டும்.
“நான் யார்?” என்ற கேள்விக்கான பதிலைத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் அருளிய பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு முதன்முதலில் உபதேசித்தார். ஏனென்றால், ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம் இதுவே. “நாம் இந்த உடலல்ல, ஆத்மா” என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். “நான் இந்த உடலல்ல,” என்பதும், “ஆத்மா” என்பதும் பலருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கலாம். இதை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைக் காண்போம்.
யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், “அவர் போய்விட்டார்” என்று உற்றார் உறவினர்கள் அழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், “போய்விட்டது யார்?” உடல் அங்கேயே இருக்கும்பொழுது, “அவர் போய்விட்டார்” என்று ஏன் அழ வேண்டும்? இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், போனது உடல் அல்ல, வேறு ஏதோ ஒன்று உடலை விட்டுச் சென்றுவிட்டது.” அதைத்தான் சாஸ்திரங்கள் ஆத்மா” என்கின்றன.
யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அவர் போய்விட்டார்” என்று உற்றார் உறவினர்கள் அழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், போய்விட்டது யார்?”
நமக்குத் தலைவலி வந்தால், “என் தலை வலிக்கிறது” என்று சொல்வோம். ஒருபொழுதும் “நான் வலிக்கின்றேன்” என்று சொல்வதில்லை. “இஃது என் பேனா” என்று நான் சொன்னால், அதன் பொருள், “நான் இந்த பேனாவின் உரிமையாளன்” என்பதே. அதாவது, நான் வேறு, இந்த பேனா வேறு என்று அர்த்தம். அதுபோலவே “என் தலை வலிக்கிறது” என்று சொன்னால், நான் வேறு, தலை வேறு என்றும், என் தலையில் பிரச்சனை என்றும் பொருள். நம் பேச்சு வழக்கிலும்கூட, நான் வேறு, என் உடல் வேறு என்னும் உணர்வைப் பார்க்கலாம். அதாவது, “நான் ஓர் ஆத்மா” என்பதையும், “நான் இந்த தற்காலிக உடலின் உரிமையாளன்” என்பதையும் உணர முடியும்.
நமது உடலை ஒரு காருக்கு ஒப்பிடலாம். காரில் வெளிச்சத்திற்கு ஹெட்லைட் இருக்கிறது, நமக்கோ கண்கள் இருக்கின்றன. நமக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் உள்ளன, காருக்கு நான்கு சக்கரங்கள் உள்ளன. இருந்தும், ஓர் ஓட்டுநர் அதனுள் அமர்ந்து அதை இயக்கவில்லையென்றால், கார் ஓர் அங்குலம்கூட நகராது. அதுபோலவே, நம் உடலுக்கு கண், காது, கைகள், கால்கள் என அனைத்து உறுப்புகள் இருந்தாலும், ஆத்மா இல்லை என்றால், நம் உடல் ஓர் அங்குலம்கூட நகராது என்பதால், ஆத்மாவே உடலின் இயக்குநர் என்பதை அறிய வேண்டும்.
ஆத்மா இருப்பதின் அடையாளம்
ஆத்மா, உடல் முழுவதும் உணர்வினால் பரவி இருக்கின்றது. உணர்ச்சியே ஆத்மா இருப்பதன் அடையாளமாகும். ஆத்மா உடலை விட்டுப் பிரிவதே மரணம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு ஆத்மா பிரிந்துவிட்டால், அந்த உடலுக்கு நெருப்பு வைத்தாலும் அதில் எந்த உணர்ச்சியும் இருக்காது. ஆனால் உடலினுள் ஆத்மா இருக்கும்போது, உடல் முழுவதும் உணர்ச்சி பரவியிருப்பதன் காரணத்தால், நம் உடலில் எந்தவொரு பாகத்தில் சிறிய ஊசியை வைத்துக் குத்தினாலும் நமக்கு வலி இருக்கும். இவ்வாறு உடலில் இருக்கும் உணர்ச்சியை வைத்து ஆத்மா இருப்பதை உணரலாம்.
விஞ்ஞான விளக்கம் நவீன யுகத்தில், விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே பொது மக்கள் எதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக சாஸ்திரங்களைவிட மக்களுக்கு விஞ்ஞானத்தில் அதிக நம்பிக்கை உள்ளது. சாஸ்திரங்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் பன்னெடுங் காலமாக இருந்து வந்துள்ளன, மாறாக விஞ்ஞானிகளோ தங்களது கருத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இருப்பினும், மக்கள் விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால், ஆத்மாவின் இருப்பை விஞ்ஞானப்பூர்வமாகவும் இங்கு விளக்குகிறோம்.
இறக்கும் தருவாயில் ஏற்படும் அனுபவம்
ஓர் இதய அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் இதயத் துடிப்பு, மூளையின் அலைவரிசை என அனைத்தும் நின்றுவிட்டது. மருத்துவ ரீதியாக அந்த நோயாளி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்பு அரைமணி நேரம் கழித்து அந்த நோயாளி மீண்டும் உயிர் பெற்று வந்தார், அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது. பின்னர், அந்த மருத்துவர் நோயாளியைப் பார்க்க வந்தபோது, அவரை அந்த நோயாளி மிகவும் மோசமாகத் திட்டினார்: “நான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தேன், கிட்டதட்ட இறந்துவிட்டேன். ஆனால் நீங்களோ கோல்ப் விளையாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள். என்ன மருத்துவர் நீங்கள்?” இதைக் கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சி. “அதெப்படி உனக்குத் தெரியும்” என்று வினவ, அந்த நோயாளி தனது அனுபவத்தை விளக்கினார். “நான் எனது உடலைவிட சற்று உயரத்தில் மிதந்தேன், என் உடலை நானே பார்த்தேன்.” மேலும், நோயாளிகளை கவனிக்கும் பெண்கள் எப்படி முயற்சித்தார்கள் என்பதையும் விவரமாக விளக்கினார். மருத்துவ ரீதியாக இறந்துவிட்ட ஒருவர் எவ்வாறு இத்தகவல்களைத் தெரிந்து கொண்டார் என்பது மருத்துவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஆத்மாவைப் பற்றி அறியாத நபர்களால் இதைப் புரிந்துகொள்வது கடினமே. இருப்பினும் உடலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை இருப்பதை மருத்துவர்கள் ஊர்ஜிதப்படுத்தினார்கள்.இதய அறுவை சிகிச்சையின்போது, உடலை விட்டு வெளியேறி பின்னர் உடலினுள் நுழைந்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிகள் பல. முற்பிறவி ஞாபகம் குறித்து பலர் ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர். அவர்களில் பிரபலமானவர், இயன் ஸ்டீவன்சன். இவர் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மனோவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 2000க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார். பெரும்பாலான நிகழ்வுகளில் குழந்தைகள் தங்களது முற்பிறவியை ஞாபகப்படுத்தி வெளிப்படுத்தியுள்ளனர். அவர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறைந்தது 80 சாட்சியங்கள் சரியாக இருந்தால் மட்டுமே பதிவு செய்தார். யாருக்கும் தெரியாத பல அந்தரங்கமான தகவல்கள் அவருடைய பதிவில் இருக்கின்றன. உதாரணமாக, ஒருவர் தான் இறந்த சில மாதங்கள் கழித்து, வேறொரு இடத்தில் பிறந்தார். பின்னர், தன்னுடைய முற்பிறவியில் வசித்த கிராமத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிவித்தார். தனது முற்பிறவியின் மொழியை தனது இப்பிறவியின் தாய்மொழியைக் காட்டிலும் மிகவும் சரளமாகப் பேசினார். இக்குழந்தை அந்த ஊரில் இறந்துபோன அதே நபர்தான் என்பதை விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
எப்படி இருந்தாலும், ஆத்மாவின் குணத்தை அறிவது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான ஒன்றே. ஆத்மாவைப் பற்றி நமது சாஸ்திரங்கள் மிகத் தெளிவான விளக்கங்களைத் தருகின்றன. எல்லா ஆராய்ச்சிகளும் ஏற்கனவே செய்தாயிற்று, புதிதாக செய்வதற்கு ஏதுமில்லை. சாஸ்திரங்களின் மீதான நம்பிக்கையைப் பொறுத்தே இஃது அமைகிறது. துரதிர்ஷ்டவசமாக விஞ்ஞானப்பூர்வமாக விளக்கவில்லை என்றால் மக்கள் அதனை கற்பனை கதை என்று நினைக்கிறார்கள்.
தங்களது முற்பிறவியை நினைவுகூர்ந்து நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தோர் பலர்.
ஆத்மா நித்தியமானது. கிருஷ்ணர் ஆத்ம விஞ்ஞானத்தை உபதேசித்த பொழுது முதலில் கூறியது இதுதான். “நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.” (பகவத் கீதை 2.12) ஆத்மா நித்தியமானது, இந்த ஜடவுடலின் அழிவால் அஃது அழிவடையாதது என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித் தார். இந்த உடல் அழிந்தாலும் அதற்கு அப்பாற்பட்டு ஆத்மா நித்தியமாக வாழும் என்பதையும், அந்த ஆத்மாவே நாம் என்பதையும் விளக்குகிறார். ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே.
நித்தியமான ஆத்மா அநித்தியமான உடலோடு அடையாளம் கொள்ளும் போது, எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பமாகின்றன. ஆத்மா எல்லா ஞானமும் உடையது, கல்வியின் நோக்கம் ஆத்மாவிடம் ஏற்கனவே இருக்கும் ஞானத்தை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தற்போதைய கல்விமுறை ஆத்ம ஞானத்தை மூடி மறைக்கும்பொருட்டே அமைந்திருக்கிறது. நமது பாடத்திட்டத்தில் ஆத்மாவில் உறைந்திருக்கும் ஞானத்தை வெளிக் கொண்டு வருவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை.
ஆத்மாவின் இயற்கை ஆனந்தமய மானது என்ற காரணத்தினால்தான் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் ஆனந்தமாக இருக்க விரும்புகிறோம். இஃது ஆத்மாவின் இயற்கையான தன்மை. நாம் இந்த உடல் என்று நம்மை அடையாளம் கண்டு கொள்ளும்போது புலனின்பத்தை நாடுகின்றோம். ஆனால், ஆத்மா திருப்தியடையும்போதே உண்மையான ஆனந்தம் கிடைக்கும்.
ஆத்மா இதயத்தில் அமைந்துள்ளது என்று முண்டக உபநிஷத் கூறுகின்றது. பகவத் கீதை மற்றும் உபநிஷத்துக்களில் ஆத்மாவைப் பற்றி மேலும் விளக்கப் பட்டுள்ளது. தெளிந்த புத்தியினால் மட்டுமே ஆத்மாவை அறிந்து கொள்ள முடியும், மழுங்கிய புத்தியினால் அல்ல.
நுண்நோக்கி மூலமாக ஆத்மாவைப் பார்க்க இயலுமா?
ஆத்மா மிகவும் சிறியது.
தலைமுடியின் நுனியை பத்தாயிரம் பங்காக வெட்டினால் எவ்வளவு சிறியதாக இருக்குமோ, அதுவே ஆத்மாவின் அளவு. ஆத்மாவைப் பார்ப்பதற்கு நுண்நோக்கியை உபயோகப்படுத் தலாமே என்று சில விஞ்ஞானிகள் பரிந்துரைக்கலாம். ஆனால் ஆத்மாவின் அளவு இவ்வளவு என்றாலும், ஆத்மாவானது பௌதிக வஸ்து அல்ல என்பதால், பௌதிக கருவியினாலும் புலன்களாலும் அதனைப் பார்ப்பது இயலாது.
ஆத்மா உடல் மாறக்கூடியதா?
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (2.13), ஒரு ஜீவன், ஓர் உடலினுள் இருக்கும்போது, குழந்தைப் பருவத்திலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோல, மரணத்தின்போது வேறு உடலுக்குச் செல்கிறான் என்று கூறுகிறார். இதை நாம் நமது நடைமுறை அனுபவத்திலும் உணர முடியும். நமது உடல் பல்வேறு மாறறங்களைக் கடந்து வந்துள்ளது. ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் “நான்” என்னும் உணர்வு மாறுவதில்லை. அதுபோலவே, மரணம் என்னும் மாற்றத்தை இந்த உடல் சந்திக்கும்போது, நாம் நமது தற்போதைய உடலை விட்டு மற்றோர் உடலை அடைவோம்!!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
சகலம் கிருஷ்ணார்ப்பணம்.

No comments:

Post a Comment