Sunday 23 February 2014

தியானத்தில் உட்கார்ந்தால் எண்ணங்கள் ஓடுகிறது, என்ன செய்வது?

சத்குரு : தியானம் செய்யும்போது மனதில் எண்ணங்கள் வரக்கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள். இத்தகைய கட்டுப்பாடுகளை உங்கள் உடலுக்கு வைக்கிறீர்களா? “நான் இப்போது படித்து கொண்டிருக்கிறேன். எனவே என்னுடைய இதயம் தற்போது துடிக்கக்கூடாது, என்னுடைய ரத்தம் ஓடக்கூடாது” என்று எப்போதாவது நினைத்தீர்களா? உடலுக்கு எந்த கட்டுப்பாடும் வைக்கவில்லை. அப்படி என்றால் உங்கள் மனதை மட்டும் ஏன் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஏனென்றால் நீங்கள் மனதின்மீது அதிக கவனம் செலுத்துகிறீர்கள். இதயத் துடிப்பின் மீது நீங்கள் கவனம் செலுத்துவதில்லை. எனவே இதயத்துடிப்பு உங்களுக்கு கவனச்சிதைவை ஏற்படுத்துவதில்லை. உண்மையில் உங்கள் மனதைவிட உங்கள் உடல்தான் மிகவும் சிக்கலான வேலைகளைச் செய்கிறது அல்லவா? தற்போது உங்கள் உடல் மீது நீங்கள் கவனம் செலுத்தினால், என் பேச்சின் மீது உங்களால் கவனம் செலுத்த முடியுமா? முடியாது.

அதாவது நீங்கள் உடலை பொருட்படுத்தாமல் இருப்பதற்குக் கற்றுக்கொண்டீர்கள். அதேபோல மனம் எது செய்தாலும் பரவாயில்லை அதை ஒரு முட்டாள் என்று இனம் கண்டு கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி ஒரு முட்டாள் எப்போதும் உளறிக்கொண்டு இருந்தால், அவரை ஒதுக்கி விட்டு உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்வதில்லையா? அதே போல்தான். அதுதான் இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.

உங்களில் பலருக்குத் திருமணம் ஆகியிருக்கும் அல்லவா? சிலசமயம் உங்கள் துணைவரை புறக்கணித்துவிட்டு உங்கள் வேலையை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள். அப்படித்தானே? அப்படிச் செய்ய உங்களுக்குத் தெரியாவிட்டால் இவ்வளவு காலம் திருமண உறவில் தொடர்ந்து வாழ்ந்திருப்பீர்களா என்ன!!! அவர் பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் கவனம் செலுத்தி இருந்தால், அந்த வார்த்தைகளுக்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்லியிருந்தால், உங்களால் இவ்வளவு காலம் தொடர்ந்து வாழ்ந்திருக்க முடியாது. சிலவற்றிற்கு கவனம் செலுத்தவும் பலவற்றை புறக்கணிக்கவும் நீங்கள் கற்றிருக்கிறீர்கள். அதேபோல் தான் நீங்கள் மனதையும் கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment