Monday 3 February 2014

யோக சாதனைகள் என்பது ஆண்களுக்குரியதே என்றும், பெண்கள் உடல் கூற்றின் அடிப்படையில் அது அவர்களுக்கு ஏற்புடையதல்ல என்றும் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இது தவறான கருத்தாகும். யோக சாதனை என்பது மனித குலத்திற்கு பொதுவானதே அல்லாமல் அதில் ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. அன்னை பார்வதி தேவியே நெருப்பில் நின்று கடும் தவம் புரிந்து இடப்பாகம் அடைந்ததாக புராணம் சொல்கிறது.

குண்டலினி யோகத்தைப் பற்றி தமிழ் மூதாட்டியான ஔவையை விடத் தெளிவாக யாரும் சொல்லி விடவில்லை. திருமூலர் தரும் அமுரிதாரணை என்கிற யோகத்தை பெண்களும் செய்யலாம் என்றே சொல்லியிருக்கிறார். ஆண்கள் சுக்கிலத்தைக் கட்டுப்படுத்தியும், பெண்கள் சுரோணிதத்தைக் கட்டுப்படுத்தியும் எந்த யோகப் பயிற்சியும் செய்யலாம். மேலும் அவர் தரும் கூடுதல் தகவல் சுக்கிலம் என்பதுவும், சுரோணிதம் என்பதுவும் விந்து நாதம் கூடியதே. அதாவது விந்துத் தத்துவம் அதிகம் உள்ளது சுக்கிலம், நாதத் தத்துவம் அதிகம் உள்ளது சுரோணிதம். விந்து, நாதம் இரண்டிலுமே இருக்கிறது. ஒவ்வொரு உயிரிலும் விளங்குகிறது.

ஔவையார் வினாயகர் அகவலில் தன் யோக அனுபவங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

''புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி'' என்றும்

''மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால்(காற்றால்) எழுப்பும் கருத்தறிவித்தே'' என்றும் பாடியிருக்கிறார். இது ஒரு சான்றே போதும் பெண்களுக்கு யோகப் பயிற்சியில் தடையேதும் இல்லை என்பதற்கு.

''மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்''. எவ்வளவு தெளிவான வரிகள். மாதவம் செய்திருந்தால் தான் மாதராய் பிறக்கவே முடியுமாம். அப்படியென்றால் அவர்களே ஜென்மாந்திரத்திலும் தவசீலர்கள். பொதுவாக இறைவன் படைப்பில் பெண்களுக்கு மாதவிடாய், கருவுருதல், குழந்தை ஈன்றெடுத்தல், பாலூட்டுதல் போன்ற துன்பங்கள் இருப்பதால், இவர்கள் ஒருபடி இறைவனை நோக்கி முன்னேறினால் அவன் 99 படி கீழே இறங்கி ஓடி வந்துவிடுவான். இதைத்தான் பெண்களுக்கு குண்டலினி விரைவில் கிளம்பும் என்று சொல்வார்கள். இந்த யோக சாதனை இல்லறத்திற்கு இடையூறாக இருப்பதால்தான் பெரும்பாலும் பெண்கள் பக்தி யோகத்தைக் கைகொள்கிறார்கள். வயதாகும் போது எளிதில் யோகம் கைகூடிவிடுகிறது. நல்ல குருவின் திருவருளைப் பெற்றுவிட்ட பெண்கள் குடும்பத்தில் இருந்து கொண்டே மேன்மை அடைகிறார்கள். இதற்கு என் நண்பர் வட்டத்திலேயே உதாரணமாக விளங்குபவர்கள் இருக்கிறார்கள். நேர்மையான மனிதர் கடவுளின் உன்னதமானப் படைப்பு என்பதை உணர்ந்து இரக்கம், மனிதநேயம் போன்ற உயர்ந்த இலட்சியங்களை முனைப்புடன் கடைபிடிக்கின்றனர்.

பொதுவாக பெண்கள் எந்த விஷயத்தையும் உடனே நம்பிவிட மாட்டார்கள். ஆராய்ந்து, உணர்ந்து உண்மைதான் என்பதைக் கண்டு கொண்டால் அச்செயலில் பிடிவாதமாக நின்று வெற்றியடைவார்கள்.

பெண்கள் சாதனையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆண்களைப் போல அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. குடும்பத்தோடு வாழ்வதையே விரும்புவார்கள். அதுதான் நல்லதும் கூட. கற்பையும், குடும்பப் பராமரிப்பையும் கூட அவர்கள் ஒரு தவமாகவே செய்வார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக யோக சாதனையில் மனிதன் வெற்றி பெற காரணமாக இருப்பவளே வாலை என்கிற குண்டலினி சக்திதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இனியும் இது போன்ற தவறான கருத்துக்களை பரப்புபவர்கள் அதை நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment