Tuesday 26 April 2016

விதியை மதியால் வெல்ல வேண்டுமா
மதி என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும். மதி என்றால் அறிவு, புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று சூழ்நிலைக்குத் தக்கவாறு சொல்லிக் கொள்ளலாம்.
விதி என்றால் விதிக்கப்பட்டது என்று பொருள். விதிக்கப்பட்டது என்ன என்பது ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின் தான் தெரியும். பல சமயங்களில் புரிந்து கொள்ள முடியாத, காரணம் கூற இயலாத சம்பவங்களுக்கும் விதிப்படி நடந்து விட்டது என்றும் கூறுகிறோம்.
நம் எல்லைக்கு அப்பாற்பட்டு, நம் கட்டுப்பாட்டுக்கு மீறி நடப்பவைகளும் விதியில் அடங்கும். உதாரணத்துக்கு இயற்கைச் சீற்றங்களை எடுத்துக் கொள்ளலாம், சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பது ஆகியவை தானாக ஏற்படுபவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சென்னையில் மழை பெய்யும், கோடையில் வெயில் கொளுத்தும் என்பது நியதி. அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி.
வாழ்க்கையில் நாம் புரிந்து கொண்டு முடிவு எடுக்கும் தருணத்தில் இருந்து விதி எனப்படுவது முக்கியத்துவம் பெற துவங்குகிறது. பள்ளிக்குச் செல்லலாமா இல்லை வயிற்று வலி எனப் பொய் சொல்லிவிட்டு வீட்டிலேயே தங்கிடலாமா என்பதில் இருந்து நாம் முடிவெடுக்கும் எந்த நிகழ்வுக்கும் எதிர் வினை உண்டு. இந்த சின்ன முடிவின் வினை எப்படி இருக்கும் என்றால், ஒன்று நாம் அன்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடத்தைத் தவற விட்டிருப்போம் அல்லது வயிற்று வலி எனப் பொய் சொன்னதினால் அம்மாவிடம் ரெண்டு அடி வாங்கியிருப்போம். எந்த செயலின் பின் விளைவுக்கும் விதி என்ற பெயர் வந்துவிடுகிறது.
நன்றும் தீதும் பிறர் தர வாரா. எல்லாமே நம் செயல்களின் பலன்கள் தான். இங்கே விதியைப் பற்றி பேசும்போது கர்மாவைப் பற்றியும் சொல்ல வேண்டியுள்ளது. முற் பிறவியில் செய்த நன்றும் தீதும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதனாலேயே பிறக்கும் குழந்தைகளே வெவ்வேறு மாதிரி பிறக்கின்றன, ஒரு குழந்தை ஏழை வீட்டிலும் இன்னொன்று பணக்காரர் வீட்டிலும். ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், ஒரு குழந்தை உடல் ஊனத்துடனும். ஒரு குழந்தை மேதாவியாகவும், ஒரு குழந்தை புத்திக் குறைபாடுடனும்.
இவ்வாறு வேறுபாடுகள் இருந்தும் எல்லா மானிடர்களுக்கும் பொதுவானது என்னவென்றால் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம். நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பின்னால் வரும் நம் வாழ்க்கைப் பாதையை வகுக்கும் விதியாக மாறுகிறது. அதனால் தான் நாம் செய்யும் செயல்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றன.
இராமாயணக் கதை உலகறிந்தது. அதில் இராமனுக்கு முடிச்சூட்டல் நாளை காலை என்னும் போது கைகேயின் விண்ணப்பத்தால் காட்சி மாறி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்லவும் பரதன் அயோத்தியை ஆளவும் சூழ்நிலை மாறுகிறது. இராமனை தன் மகனாக பாவித்த கைகேயி எப்படி இப்படி ஒரு கோரிக்கையை தசரதன் முன் வைக்க மனம் வந்தது? அங்கு ஒரு திருப்பம். கூனி என்னும் அவளின் ஊரில் வந்த அவள் தோழி/நலன் விரும்பி அவள் மனத்தை தன் வாதத் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாற்றுகிறாள். அதற்கு ஏற்றாற்போல் முன்பு தசரதன் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் அவள் உதவிக்கு வருகின்றன. கைகேயின் எண்ணத்தை முறியடிக்க தசரதன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவன் தன் மதியால் எத்தனையோ வாதங்களை அவள் முன் வைத்தான். எதுவும் அவள் மனத்தை மாற்றவில்லை.
இங்கே இராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. போகாவிட்டால் பின்னால் இலங்கையில் இராவண வதமே நடந்திருக்காது, இராமனின் அவதாரக் காரணமே நிறைவேறி இருக்காது. மேலும் தசரதனின் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் அவன் கண் தெரியாத கணவன் மனைவி இருவரின் மகனை தெரியாமல் கொன்று அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருப்பார். தசரதன் இறக்கும் தருவாயில் அவருடன் எந்தப் பிள்ளையும் உடன் இருக்கமாட்டார்கள் என்பதே அவரின் சாபம். அன்று அவர் செய்த செயல் பின்னாளில் இவ்வாறு விதியாக மாறியது. இவ்வாறு ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் வரும் நாட்களிலும் ஒரு வினை உண்டாகும், அதுவே விதி.
இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தும் இறைவன் இச்சையினாலேயே நடக்கிறது. அவன் அன்றி உலகில் ஓர் அணுவும் அசையாது. “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று இறைவனை நினைக்கக் கூட அவன் மனம் வைக்க வேண்டும் என்றிருக்கும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துக்கும் அவனே காரணம் என்றும் ஆகிறது. அதெப்படி நன்றும் தீதும் பிறர் தர வாரா, ஆனாலும் எல்லாம் அவன் செயல் என்று முன்னுக்கு முரணாக வருகிறதே என்கிற கேள்வி இங்கே எழும். இரண்டு கால்களையும் தூக்கி நிற்க முயற்சி செய்தால் மனிதன் கீழே விழுந்துவிடுவான் என்று விதிக்கப்பட்டுள்ளது. அதே போல பறவைகள் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்கும் என்பதும் இயற்கையாக விதிக்கப்பட்டுள்ளது. இவ்வியற்கை விதிகளை மாற்ற முடியாது.
ஆனால் இருக்கும் வரைமுறைகளுக்குள் நாம் சிறப்பாக செயலாற்றுவது நம் கையில் உள்ளது. எல்லாம் அவன் செயல், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று வாளாய் இருக்க முடியாது. மனிதன் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆற்றல் வெவ்வேறு. அந்தத் தனிப்பட்ட ஆற்றலைக் கொண்டு நம் இலக்கு என்ன, நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதே நம் வாழ்வின் பாதையையும், வெற்றியையும் நிர்ணயிக்கிறது.
முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணமே முயற்சி. இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி. அது தான் விதி. பிறக்கும் போதே நமக்குக் கொடுக்காமல் நம்மை தேட வைத்து நமக்கு கிடைக்க வேண்டியதை போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
என்னுடைய கர்மவினை எப்படிப்பட்டதாக இருப்பினும் என்னுடைய சமூக சூழல் எவ்வாறாக இருப்பினும், என்னுடைய பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், எனக்கு அது ஒரு பொருட்டில்லை. நான் என் இலக்கை நோக்கிச் செல்கிறேன் என்று உழைப்பவர்கள் விதியை மதியால் வென்றவர்கள் என்று கூற மாட்டேன் விதியை மதியாதவர்கள் என்றே சொல்லுவேன். இவர்களே வாழ்க்கையில் உண்மையில் வெற்றிப் பெற்றவர்கள்.
நம் வாழ்வின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது தான். அப்படி இருப்பதற்கு ஒரே வழி வாழ்க்கை முறை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் எண்ணங்களை செலுத்துவதே.
செயலாக மாறாத எந்தவொரு எண்ணமும் நம்மை ஆனந்தத்திலிருந்து வெளிநடத்திச் சென்று விடுகிறது. எனவே ஞானம் (அ) அறிவு, செயல், சிந்தனை – இவை மூன்றுமடக்கிய எண்ண முறையானது அவசியம்.
உதாரணத்துக்கு வேலை வாய்ப்புத் தேடி அலைகிறோம், நம் இலக்கு வெளிநாட்டில் வேலை செய்வது. அந்த வாய்ப்பைத் தரும் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து நன்றாக உழைக்கிறோம். ஆனால் சில ஆண்டுகள் காத்திருப்பின் பின்னும் அந்தக் கம்பெனி வெளிநாடு செல்லும் வாய்ப்பை நமக்கு அளிக்கவில்லை. அந்நிலையில் கம்பெனியை விட்டு விலகி வேறு கம்பெனியில் வேலை தேடலாம். அந்தப் புது கம்பெனியிலும் வெளிநாடு அனுப்புவார்களா என்று தெரியாது. அல்லது அதே கம்பெனியில் தொடர்ந்து இருந்து வெளிநாடு செல்லாவிட்டாலும் பதவி உயர்வை பெற்று வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இங்கே விதி என்பது என்ன? நாம் ஓர் இலக்கு வைத்து உழைக்கிறோம், அறிவுடன் செயல்படுகிறோம். ஆயினும் நம்மால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. வேறு எதோ தான் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இந்நிலையில் தோல்வியை எண்ணிக் கலங்கி நிற்பதா? வேறு தவறான பாதையில் இலக்கை அடைய நினைப்பதா? அல்லது இருக்கும் வாய்புகளை வைத்து தீவிரமாக முன்னேறி உழைப்பதா? இந்த முடிவை எடுக்கும் சுதந்திரம் தான் நம் கையில் உள்ளது.
நாம் நம்முடைய எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் நமக்கு விதிக்கப்பட்டதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்ள முடியும். பாதையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எனவே, வாழ்க்கை என்பது வெறும் திட்டமிடா ரசாயன மாற்றங்களால் ஆனதல்ல. நமக்குப் பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பப் பழகினால் விதியை மதியால் வென்றுவிட்டோம் என்று கொள்ளலாம்.
முற்பிறவி வாசனைகள் என்னும் நதி மனிதனை நல்ல வழியிலோ கெட்ட வழியிலோ இழுத்துச் செல்கிறது. ஆனால் முயற்சியால் கெட்ட வழியில் இருந்து நல்ல வழிக்குத் திரும்பலாம், அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்கும் எளிதாக திசை மாறலாம். அதனால் மனிதனுக்கு முயற்சி மிக அவசியம். ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இலையைப் போல் இல்லாமல் ஓர் இலக்கை நோக்கி துடுப்பைப் போட்டு ஓடும் ஓடமாக நாம் இருக்க வேண்டும்.
இதுவே விதியைப் பற்றி அழகாகச் சொல்கிறது. “எதை மாற்ற முடியாதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், மாற்றக் கூடியதை மாற்றியமைக்க துணிச்சலும், மாற்ற முடியாதவை, மாற்ற முடிந்தவை – இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் எனக்குத் தாருங்கள் இறைவா!”
இதை நாம் கடைபிடித்தால் விதி, மதி இரண்டையும் நம் வசப்படுத்தியவர்கள் ஆகிறோம்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment