Tuesday 5 April 2016

பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்



தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவம் வந்துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம்.
பருவத் தலைவரொடும் புல்கியின்பங் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவது மெக்காலம்.
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்ட மெல்லாமறிந்து
குருவையறிந்தே நினைத்துக் கும்பிடுவ தெக்காலம்.
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போ லாவதினி யெக்காலம்.
பற்றற்று நீரிற் படர்தாமரை யிலைபோல்
சுற்றத்தை நீங்கிமனந் தூரநிற்ப தெக்காலம்.
சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம்.
மருவும் அயற்புருடன் வருநேரங் காணாமல்
உருகுமனம் போலெனுள்ளம் உருகுவது மெக்காலம்.
தன்கணவன் தன்சுகத்திற் தன்மனம் வேறானதுபோல்
என்கருத்தி லுன்பதத்தை ஏற்றுவது மெக்காலம்.
கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம்.
எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்
கவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம்.
கண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச்
சொன்னபரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம்.
ஆக மிகவுருக வன்புருக யென்புருகப்
போக வநுபூதி பொருந்துவது மெக்காலம்.
நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்
பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்.
அன்பை யுருக்கி அறிவையதன் மேற்புகட்டித்
துன்பவலைப் பாசத் தொடக்கறுப்ப தெக்காலம்.
கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம்.
தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்
பொரியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம்.
ஆதார மூலத் தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம்.
மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம்.
அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவதெக்காலம்.
மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம்.
வாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத்
தோயும்வகை கேட்கத் தொடங்குவது மெக்காலம்.
வட்டவழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக்
கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம்.
உச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம்.
பாராகிப் பார்மீதிற் பஞ்சவர்ணந்தானாகி
வேறாகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம்.
கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ்
சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவது மெக்காலம்.
கள்ளக் கருத்தை யெல்லாங் கட்டோடு வேரறுத்திங்
குள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப தெக்காலம்.
அட்டகாசஞ் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம்.
அறிவுக் கருவியுட னவத்தைப்படும் பாட்டை யெல்லாம்
பிரியமுடன் நிருத்திப் பெலப்படுவ தெக்காலம்.
பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம்.
தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல்
ஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம்.
புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி
யென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம்.
நட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள்
கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம்.
நானேநா னென்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
தானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம்.
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி யெக்காலம்.
ஐந்து பொறிவழிபோய் அலைத்துமிந்தப் பாழ்மனதை
வெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம்.
இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்வோருந் தான்மாண்டு
சினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம்.
அமையா மனதமையும் ஆனந்த வீடுகண்டங்
கிமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம்.
கூண்டுவிழுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம்.
ஊனிறைந்த காயமுயிரிழந்து போகுமுன்னம்
நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம்.
கெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்த
சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம்.
தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்
நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம்.
வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம்.
காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல்
வாசி தனிலேறி வருவதினி யெக்காலம்.
ஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச்
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவது மெக்காலம்.
இடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில்
தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம்.
மூல நெருப்பைவிட்டு மூட்டிநிலா மண்டபத்தில்
பாலைஇறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்.
ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல
ஏக வெளியி லிருப்பதினி யெக்காலம்.
பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட்டாப் பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம்.
மலமுஞ் சலமுமற்று மாயையற்றுமானமற்று
நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம்.
ஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித்
தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம்.


No comments:

Post a Comment