Tuesday 5 April 2016

பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்



அஞ்ஞானம் விட்டே அருண்ஞானத் தெல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம்.
வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று
சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம்.
மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி
நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம்.
எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல்
கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்காலம்.
என்னை அறிந்து கொண்டே எங்கோமா னோடிருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்ப தெக்காலம்.
ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை
வேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம்.
ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன்
காணுதலா லின்ப முற்றுக்கண்டறிவ தெக்காலம்.
மும்முலமுஞ் சேர்த்து முளைத்தெழுந்த காயமிதை
நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்ப தெக்காலம்.
முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவதினி யெக்காலம்.
கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம்.
கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைத் தேயிருக்க
நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம்.
ஆரென்று கேட்டதுவும் அறிவுவந்து கண்டதுவும்
பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம்.
நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்கு மேற்கண்டுகண்ணில் முளைந்தெழுப்ப தெக்காலம்.
முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்
அப்பாழும் பாழா அன்புசெய்வ தெக்காலம்.
சீயென் றெழுந்து தெளிந்த நின்றவான் பொருளை
நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம்.
வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும்
யவ்வெழுத்தினுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம்.
எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம்.
அருவாய் உருவாகி ஆதியந்த மாகிநின்ற
குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம்.
நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாந்
தானென்று நீயிருந்த தனையறிவ தெக்காலம்.
என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்தபின்பு
தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்ப தெக்காலம்.
ஒளியி லொளியாம் உருப்பிறந்த வாறது போல்
வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம்.
ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியிலேயடைத்து
வெளியிட்டுச்சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம்.
காந்தம் வலித்திரும்பை கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக்காலம்.
பித்தாயங்கொண்டு பிரணவத்தை யூடறுத்துச்
செத்தாரைப்போலே திரிவதினி யெக்காலம்.
ஒழிந்தகருத்தினை வைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்தபிணம்போலிருந்து காண்பதினி யெக்காலம்.
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம்.
சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்காற்
றூதுந் துருத்தியைப் போட்டுனையடைவ தெக்காலம்.
ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்
ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம்.
கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்
புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம்.
தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் உன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம்.
தூரோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை
வேரோ டிசைந்து விளங்குவது மெக்காலம்.
பாக நடுவேறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏசநடுமூலத் திருத்துவது மெக்காலம்.
ஓரின்பங் காட்டும் உயர்ஞான வீதிசென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம்.
காரணமாய் வந்தென் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாகக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம்.
ஆயுங் கலைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்ததற்பின்
நீயென்று மில்லா நிசங்காண்ப தெக்காலம்.
குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப்
பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம்.
மத்தடுத்து நின்று மருளாடு வார்போல
பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம்.
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம்.
என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின்
தன்னை யறிந்து தவம் பெறுவ தெக்காலம்.
உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக்
கள்ள மனந் தெளிந்து காண்பதினி யெக்காலம்.
வாசித்துங் காணாமல் வாய்விட்டும் போசாமல்
பூசித்துந் தோன்றாப் பொருள் காண்ப தெக்காலம்.
பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குட் பிணிப்பதினி யெக்காலம்.
நாட்டுக்கா லிரண்டும் விட்டு நடுவுக்கா லூடேபோய்
ஆட்டுக்கா லிரண்டினுள்ளே அமர்ந்திருப்ப தெக்காலம்.
பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம்.
பலவிடத் தேமனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம்.
காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே
ஓமக் கனல் வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம்.
உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடன மினிகாண்ப தெக்காலம்.
வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து
நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம்.
பட்டமற்றுக் காற்றிற் பறந்தாடும் சூத்திரம்போல்
விட்டு வெளியாக விசுவசித்த லெக்காலம்.
அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருளதனைக் கிட்டுவது மெக்காலம்.


No comments:

Post a Comment