Tuesday 5 April 2016

பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்



பேரறிவி லேமனதை பேசாம லேயிருத்தி
ஓரறிவி லென்னாளும் ஊன்றிநிற்ப தெக்காலம்.
அத்துவிதம் போலுமென்றன் ஆத்துமத்தினுள்ளிருந்து
முத்திதர நின்ற முறையறிவ தெக்காலம்.
நானின்ற பாசமதில் நானிருந்து மாளாமல்
நீநின்ற கோலமதில் நிரவிநிற்ப தெக்காலம்.
எள்ளும்கரும்பும் எழுமலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம்.
அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல்
என்னைவகுத் துன்னை இனிக்காண்பதெக்காலம்.
அந்தரத்தில் நீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்ப தெக்காலம்.
பிறப்பும் இறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று
மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம்.
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை
என்னு ளொருநினைவை எழுப்பிநிற்ப தெக்காலம்.
ஆசைகொண்டமாதர் அடைகனவு நீக்கியுன்மேல்
ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது மெக்காலம்.
தன்னுயிரைக் கொண்டு தான்றிரிந்த வாறதுபோல்
உன்னுயிரைக் கொண்டிங் கொடுங்குவது மெக்காலம்.
சேற்றிற் கிளைநாட்டுந் திடமாம் உடலையினிக்
காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம்.
என்வசமுங் கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து
தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம்.
தன்னை மறந்து தலத்து நிலைமறந்து
கன்மம் மறந்து கதி பெறவ தெக்காலம்.
என்னை யென்னிலே மறைந்தே இருந்தபதி யும்மறந்து
தன்னையுந் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம்.
தன்னையுந் தானேமறந்து தலைவாசற் றாழ்போட்டே
உன்னைநினைந் துள்ளே யுறங்குவது மெக்காலம்.
இணைபிரிந்த போதிலன்றி யின்பமுறும் அன்றிலைப்போல்
துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்து கொள்வ தெக்காலம்.
ஆட்டம் ஒன்றுமில்லாமல் அசைவுசற்றுங் காணாமல்
தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம்.
முன்னைவினை யாலறிவு முற்றாமற் பின்மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம்.
கள்ளுண் டவன்போற் களிதருமா னந்தமதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவ தெக்காலம்.
தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே
ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம்.
நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து
தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம்.
தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி
ஆனந்தங் கண்டே அமர்ந்திருப்ப தெக்காலம்.
உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே
மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம்.
ஏடலர்ந்த பங்கயமும் இருகருணை நேத்திரமுந்
தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம்.
ஐயாமும் ஆறு அகன்று வெறுவெளியில்
மையிருளில் நின்றமனம் மாள்வதினி யெக்காலம்.
காட்டும் அருண்ஞானக் கடலிலன்புக் கப்பல்விட்டு
மூட்டுங்கரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம்.
நானாரோ நீயாரோ நன்றாம் பரமான
தானோரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம்.
எவரவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார்
அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம்.
உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம்.
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம்.
என்னையே நானறியேன் இந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம்.
மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக்
காயத்தை வேறாக்கிக் காண்பதுனை எக்காலம்
ஐஞ்சு கரத்தானை அடியிணையைப் போற்றிசெய்து
நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்.


No comments:

Post a Comment