Thursday 5 May 2016

மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்.
கேள்வி - மரணமில்லா பெரு வாழ்வு, சாகா கலை என்றறெல்லாம் சொல்லிய ஞானிகள், சித்தர்கள் யாரும் இப்போது இல்லையே ? என்றால் அவர்கள் மரணமடைந்து விட்டார்களா ?
இராம் மனோகர் - இது புரிந்து கொள்வதில் ஏற்படும் தவறாகும். மறுபடியும் பிறக்கப் போகிறவர் சாகிறார். பிறப்பை அறுத்தவர் மரணத்தை வெல்கிறார். அதாவது அவர் சாவதில்லை இறைநிலையோடு இணைகிறார் இதுதான் உண்மையாகும். வினைமயமான இந்த உலகில் ஏற்படும் இன்பதுன்ப அனுபவங்களில் இருந்து விடுபட்டு ஆனந்தமயமான பரம்பொருளோடு இணைய வேண்டும் என்பதுதான் அனைத்து சாதனங்களின் நோக்கமாக இருக்கிறது. அப்படியிருக்க சாகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர் எப்படி ஞானியாக அல்லது சித்தராக ஆக முடியும். நிச்சயமாக அவர்கள் கூறும் கருத்துகளின் உண்மைப் பொருளைத் தவறாகப் பொருள் கொள்வதே இத்தகைய கேள்விகளுக்குக் காரணமாக இருக்கிறது. சித்தம் தெளிந்தவர் சித்தர். மெய்ப்பொருள் பற்றிய ஞானத்தை அடைந்தவர் ஞானி. அதற்கான முயற்சிகளில் ஏதேனும் ஒன்றைக் கடை பிடிப்பவர் யோகி, ஆழந்து தவம் செய்பவர் தவசி. இத்தகைய முயற்சிகளில் மனதை செலுத்தி முனைப்புடன் செயல்படுபவர் முனிவர். இத்தகைய நிலைப்படுகள் அனைத்தின் நோக்கமும், முடிவும் ஒன்றுதான். அதுதான் முக்தி.
முக்தி என்பது இறைநிலையோடு இணைந்து விடுவதுதான். சித்தர்கள், ஞானிகள் மனநிலைக்கும் நமது மன நிலைக்கும் வேறுபாடு நிறைய உள்ளது. அவர்கள் நிறை நிலையில் நின்று சொல்லும் வார்த்தைகளை, உவமைகளை நாம் குறை நிலை மனதைக் கொண்டு பொருள் கொள்கிறோம். எனவே அவர்கள் கூறும் உண்மைகள் நமக்கு சரிவர விளங்குவதில்லை. அவரவர் அறிவின் தரத்திற்கு ஏற்ப பொருள் கொள்கிறோம். அத்தகைய மேன்மக்கள் அனைவருமே நம்மைப் போல உடலெடுத்து வந்தவர்கள்தாம். ஆனால், நம்மைப் போல உலகாயத்தில் உழலாமல் அவர்கள் பிறவியின் பெரும் பயனை அடைவதற்கு பாடுபட்டார்கள். அதன் பயனாக இறைநிலையில் இணைந்திட்டார்கள். இதுதான் உண்மை. பிறகு அவர்களைக் காணவில்லையே என்று தேடுவது அறியாமையேயன்றி வேறென்ன ?
சாதனங்களால் பக்குவப்பட்ட மனதை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி என்று கொள்ளலாம். வானத்தில் இருக்கும் சூரியனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கண்ணாடி அணுவிலும் சிறியதாகும். என்றாலும் கூட அந்தச் சூரியனை இந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்ய முடியும். சரியான கோணத்தில் பிடிக்கும் பொழுது அந்தக் கண்ணாடி நிஜ சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கிறது. இதை வைத்து நிஜ சூரியனும், பிம்பமும் ஒன்று என்று சொல்லி விட முடியுமா ? முடியாது. அத்தகைய நிலைதான் ஞானிகளுடையது. அவர்கள் மனதை அவர்கள் சரியான கோணத்தில் செலுத்தியதின் பயனாக வாழும் காலத்தில் அவர்கள் பரம்பொருள் தன்மையைப் பிரதிபலித்தார்கள். ஆனால், அவர்களும் பரம்பொருளும் ஒன்றல்ல. அவர்கள் ஜீவாத்மாதான். ஆனால், அதே கண்ணாடியை சூரியனுடைய அம்சமான பெரு நெருப்பில் போட்டு விடுவோமேயானால், சிறிது நேரத்திற்குள் அது தன் சுய வியக்தியை இழந்து உருகிப் போய் விடும். அதற்குப் பிறகு கண்ணாடியுமில்லை, அது சூரியனை பிரதிபலிக்கவும் முடியாது.
மாசு படிந்த மனதிலும் கூட பராமாத்மாவின் பிரகாசம் ஒளிரத்தான் செய்கிறது. மனம் சுத்தியடைந்து வரும் அளவு பரமாத்தாவின் பிரகாசம் மேலும் மேரும் ஒளிர்கிறது. அத்தகைய மனமானது பனித்துளியைப் போன்றது. சூரியனது ஒளியில்லாத அதிகாலை வேளையில் பனி ஒரு புல்லின் மீது படிந்து துளியாக மாறுகிறது. சூரியன் உதயமான பிறகு பார்த்தால் அந்தப் பனித் துளியும் தனக்குள் ஒரு சூரியனை பிரதிபலிக்கிறது. சூரியனின் வெப்பம் ஏற ஏற பனித்துளி மறைந்து போய் விடுகிறது. அதனுள் பிரகாசித்த சூரியனின் பிம்பமும் மறைந்து போய் விடுகின்றது. இப்படி நிலையற்ற அந்தகரணத்தில் பிரதிபலிக்கின்ற ஆத்ம சொரூபம் சித் ஆபாசம் எனப்படும். அது ஆத்ம ஜோதியின் பிரதி பிம்பம் அவ்வளவுதான். அது ஆத்ம ஜோதியாகாது. ஆனால், மனதற்ற நிலையில் சித் ஆபாசம் ஒடுங்கிப் போய் விடுகிறது. நிலைத்த பரம் வஸ்து ஒன்றே எஞ்சி நிற்கிறது. அதற்குப் பிறகு ஞானி, சித்தர் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் பரம்பொருளாகி விடுகின்றனர். மனோ நாசம் செய்து அந்தப் பர வஸ்துவில் ஒன்றுவதே ஞானிகள், சித்தர்களின் நோக்கமாக இருந்தது. நோக்கம் நிறைவேறிய பிறகு அவர்களை இங்கே தேடுவதில் எந்தப் பயனுமில்லை.
எனினும் அவர்கள் காட்டிய வழிகள் நம் முன்னே வெளிச்சமாக விரிந்து கிடக்கின்றன. அதைப் பின்பற்றி நல்வழி சென்றால் நாமும் சாகாத நிலையாகிய மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று பரம்பொருள் நிலையாகிய பேரானந்த நிலையை அடையலாம்.
Like
Comment

No comments:

Post a Comment